சென்னை: 7வது 'ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராஃபி சென்னை 2023' ஹாக்கி போட்டி, நாளை முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை இந்திய அரசின் ஹாக்கி அணியுடன் இணைந்து தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
இதில் இந்தியா, சீனா, பாகிஸ்தான், மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. 16 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் ஹாக்கி போட்டி நடைபெறுவதால் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், 7வது 'ஆசிய ஆடவர் சாம்பியன்ஸ் டிராபி சென்னை 2023' ஹாக்கி போட்டி நாளை தொடங்கவுள்ளதால், இது தொடர்பாக மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் ஹாக்கி இந்தியா தலைவர் டாக்டர் திலீப் திர்கி ஆகியோர் தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.
இந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் திடீரென முதல் தளத்தில் லிஃப்ட் கோளாறு ஏற்பட்டது. இதில், ''நாளை நடைபெற உள்ள கொரியா மற்றும் ஜப்பான் இடையேயான ஹாக்கி போட்டியை பார்வையிட வந்த மூன்று ஜூனியர் ஹாக்கி சிறுவர்கள், லிஃப்டில் மாட்டிக்கொண்டனர்.
இதையும் படிங்க: 'மாணவர்களை மற்ற மாணவர்களோடு ஒப்பிடாதீர்கள்' - அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றோர்களுக்கு அறிவுரை!
உடனடியாக அங்கு இருக்கும் பராமரிப்புப் பணியாளர்கள் விரைந்து வந்து மாட்டிக்கொண்ட ஜூனியர் ஹாக்கி சிறுவர்களை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 15 நிமிடங்களுக்கு மேலாக முயற்சி செய்த ஊழியர்கள் மாட்டிக்கொண்ட மூன்று சிறுவர்களை மீட்டனர். இதனால், சற்று நேரம் அங்கு பரபரப்பு நிலவியது.
லிஃப்ட் கோளாறு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர் உதயநிதி, "சிறப்பான முறையில் மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது. தற்போது சோதனை முறையில் மைதானத்தின் செயல்பாடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. போட்டி துவங்குவதற்கு முன்பாக அனைத்து ஏற்பாடுகளும் முழுமை பெறும்" எனக் கூறினார்.
மேலும், பாகிஸ்தான் அணி வீரர்கள் உட்பட அனைத்து அணி வீரர்களுக்குமான பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம் எனவும் அவர் கூறினார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் பாகிஸ்தான் வீரர்களை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சரகாட்டம், காவடி ஆட்டம் உள்ளிட்ட தமிழ்நாடு பாரம்பரிய நிகழ்சிகளுடன் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: Hockey Asian Champions Trophy: சென்னை வந்த பாக். ஹாக்கி அணிக்கு உற்சாக வரவேற்பு!