சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள ஏடிஎம்-இல் ஸ்கிம்மர் கருவி பொருத்தப்பட்டுள்ளதைக் கடந்த 16ஆம் தேதி பணம் எடுக்கவந்த நபர் கண்டுபிடித்தார். இது குறித்து சம்பந்தப்பட்ட வங்கிக்கு அவர் புகார் அளித்தார். இதையடுத்து ஏடிஎம்-மை ஆய்வு செய்த வங்கி ஊழியர்கள், ஸ்கிம்மர் கருவி மற்றும் 'பின்' நம்பரை கண்டறிய பயன்படுத்திய சிசிடிவி கருவி ஆகியவற்றை கண்டறிந்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த மத்திய குற்ற பிரிவினர், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அதில், இச்சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் ஏடிஎம் கார்டுகளில் இருந்து பணம் திருடப்படுவதாக காவல் துறையினருக்கு புகார்கள் குவிந்தன. குறிப்பாக கவரப்பேட்டை பகுதியில் உள்ள 2 ஏடிஎம்களில் கார்டுகளை பயன்படுத்திய பிறகே பணம் பறிபோனது தெரியவந்துள்ளது. அந்த ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, அயனாவரத்திலும், திருவள்ளூரிலும் ஒரே கும்பல் கொள்ளையடித்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து செல்போன் சிக்னல்கள் வைத்து கொள்ளையர்களை காவலர்கள் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில், ஏடிஎம் கொள்ளையில் சம்பந்தப்பட்ட மூவரை இன்று கைது செய்துள்ளனர்.