சென்னை: சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியான சரவணன் என்பவரிடம், கடந்த 2020 ஆம் ஆண்டு அவரை சிலர் செல்போனில் தொடர்புகொண்டு லோன் தருவதாகக் கூறியுள்ளனர். பார்வையற்ற மாற்றுத் திறனாளியான உங்களுக்கு 1% என்ற குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாக சரவணனிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை சம்மதிக்க வைத்துள்ளனர்.
அதன்பின் கடன் பெற்றுத் தருவதற்காக பல்வேறு காரணங்களைக் கூறி, தவணை முறையில் சரவணனிடம் இருந்து 3.04 லட்சம் ரூபாய் வரை பணத்தையும் அந்த நபர்கள் பெற்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களைத் தொடர்புகொண்ட சரவணன் அவர்களின் செல்போன் எண்கள் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருப்பதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் சரவணன் அளித்த செல்போன் தொடர்பு எண் விவரங்களை வைத்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில், குற்றவாளிகள் டெல்லியில் இருப்பது தெரியவந்தது. பின்னர் டெல்லி விரைந்த தனிப்படை காவல்துறையினர் அங்கிருந்து தமிழக பெண்களான சாந்தி (37), வசந்தி (44) மற்றும் டெல்லியைச் சேர்ந்த முனீஷ் சர்மா (44) ஆகிய மூவரை கைது செய்தனர்.