தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நிலத்தை அபகரிக்க கூலிப்படை ஏவிய எஸ்ஐ: மோதலில் கண்ணை பறிகொடுத்த நபர்.. பின்னணி என்ன?

சென்னையில் பூர்வீக நிலத்தை அபகரிப்பதற்காக உறவினரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய உதவி ஆய்வாளர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

chennai
உறவினரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய காவலர் கைது

By

Published : Aug 11, 2023, 9:04 AM IST

உறவினரை கொலை செய்ய கூலிப்படையை ஏவிய உதவி ஆய்வாளர் உட்பட மூன்று பேர் கைது

சென்னை: செங்குன்றம் தங்க சாலை தெருவைச் சேர்ந்தவர் தீபேஷ்( 27). இவர் சாமியார் மடம் தண்டல் கழனி என்ற பகுதியில் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் பழுது பார்க்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் 3ஆம் தேதி தீபேஷ் அலுவலகத்தில் இருந்தபோது அடையாளம் தெரியாத 2 நபர்கள் அவரது அலுவலகம் எதிரே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அலுவலகத்திற்கு எதிரே சிறுநீர் கழிக்க வேண்டாம். தள்ளி நின்று கழிக்குமாறு தீபேஷ் அவர்களிடம் கூறியுள்ளார். இதனால் கோபமடைந்த அவர்கள் தீபேஷை ஆபாசமாக திட்டி, கை மற்றும் கட்டையால் கொலை வெறி தாக்குதல் நடத்திவிட்டு, கொலை மிரட்டலும் விடுத்துச் சென்றுள்ளனர். இந்த மோதலில் படுகாயம் அடைந்த தீபேஷ் ஒரு கண்ணை பறி கொடுத்துள்ளார்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக தீபேஷ் செங்குன்றம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் 2 அடையாளம் தெரியாத நபர்கள் தீபேஷை சரமாரியாக கண்ணில் தாக்கிய காட்சிகள் பதறவைக்கும் வகையில் அமைந்திருந்தது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து செங்குன்றம் போலீசார் நடத்திய விசாரணையில் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த ஜமித் ரபி (43) மற்றும் சோழவரம் பகுதியைச் சேர்ந்த சந்திரன் (25)ஆகிய இருவர்தான் என்பது தெரிய வந்த நிலையில், இருவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

அதாவது, ரெட்ஹில்ஸ் தண்டல்கழனி என்ற பகுதியில் 100 சென்ட் பூர்விக இடம் அமைந்துள்ளது. அந்த இடத்தை சகோதரர்களான வசந்தன் மற்றும் தேவராஜன் ஆகியோருக்கு தலா 50 சென்ட் என அவரது தந்தை பிரித்துக் கொடுத்து சென்றுள்ளார். வசந்தனின் மகளான சசிரேகாவுக்கு உதவி ஆய்வாளரான ஜெயக்குமார் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் கடந்த 2000ஆம் ஆண்டு வசந்தன் இறந்த பிறகு வசந்தனிடம் இருந்த 50 சென்ட் இடத்தை மருமகனான உதவி ஆய்வாளர் ஜெயக்குமாருக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் தேவராஜன் இறந்ததால், அவரது மகனான தீபேஷ் அவரது தந்தை தேவராஜனின் இடத்தில் நிறுவனம் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், தீபேஷிடம் உள்ள மற்றொரு 50 சென்ட் இடத்தை அபகரிக்க உதவி ஆய்வாளரான ஜெயக்குமார் பல வழிகளில் தீபேஷை மிரட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது.

ஆனால், தீபேஷ் இடத்தினை எழுதி கொடுக்காமல் இருந்ததால் ஜெயக்குமார் மற்றும் தீபேஷிற்கு இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், தீபேஷை கொலை செய்துவிட்டு இடத்தினை அபகரிக்க உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் கூலிப்படையை ஏவி உள்ளார் எனத் தெரிகிறது. பின்னர் அவர்கள் சிறுநீர் கழிப்பதுபோல நடித்து தீபேஷிடம் பிரச்னை ஏற்படுத்தி கொலை வெறி தாக்குதல் நடத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கு அண்ணா நகரைச் சேர்ந்த நீலாங்கரை போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆய்வாளர் ஜெயக்குமாரை செங்குன்றம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள ஸ்ரீதர், வினோத் ஆகிய இருவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நிலத்தை அபகரிக்க போலீஸ் அதிகாரியே கூலிப்படையை ஏவி கொலை வெறி தாக்குதல் நடத்தி கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காதலனை அடித்து விரட்டிவிட்டு சிறுமி வன்புணர்வு.. 3 பேரை கைது செய்த திருப்பூர் போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details