சென்னை:வண்ணாரப்பேட்டை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக புகார்கள் குவிந்தன. இதையடுத்து இருசக்கர வாகனங்கள் திருடும் கும்பலைத் தனிப்படை அமைத்து பிடிக்க காவலர்களுக்கு வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சிவபிரசாத் உத்தரவிட்டார்.
துணை ஆணையாளர் உத்தரவின் பேரில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையாளர் இருதயம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் திருடும் கும்பல் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
வாகனங்கள் பறிமுதல்
இந்நிலையில் வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலை தியாகராய கல்லூரி அருகே தனிப்படை காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகப்படும்படியாக வந்த இரண்டு பேரை விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்ததால் அவர்களது வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது அது திருட்டு வாகனம் என்பதும், தண்டையார்பேட்டையை சேர்ந்த கோபிநாத் என்பவருடைய இருசக்கர வாகனம் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவருடைய பெயரும் மணிகண்டன் என்பதும், இவர்கள் வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, ராயபுரம், காசிமேடு ஆகிய பகுதிகளில் இதுவரை ஏழு இருசக்கர வாகனங்களை திருடியதையும் ஒப்புக்கொண்டனர். அவர்களிடம் இருந்து இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.