சென்னை: வேளச்சேரி 100 அடி சாலையில் தனியார் கார் வாடகைக்கு விடும் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் சம்சுதீன் (42), வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், “எனது வாடகை கார் நிறுவனத்தில் இருந்து கடந்த 23ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப் என்ற நிஜந்தன் (29) என்பவர் ஆவணங்களை கொடுத்து இன்னோவா காரை எடுத்துச் சென்றார்.
மூன்று நாள்களுக்கு 17ஆயிரம் ரூபாய் கொடுத்து வாடகைக்கு எடுத்து சென்றார். அதன் பிறகு காரில் இருந்த ஜிபிஎஸ் கருவியை அகற்றிவிட்டு செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார். என்னிடம் இருந்து திருடப்பட்ட காரை மீட்டுத்தர வேண்டும்” என புகார் அளித்தார்.
புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த வேளச்சேரி காவல் துறையினர், விசாரணை செய்ததில் காரை வாடகைக்கு எடுத்த நபர் வடபழனியைச் சேர்ந்தவர் என கண்டறிந்து அங்கு வைத்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் கொடுத்த ஆதார் மற்றும் ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்கள் போலி என தெரியவந்தது.
நிஜந்தன் என்பவர் காரை வாடகைக்கு எடுக்க திட்டமிட்டு, திருவான்மியூரைச் சேர்ந்த அருண் என்பவர் மூலமாக போலியாக ஆவணங்கள் தயாரித்து ஓட்டுநர் உரிமத்தை பிரதீப் என்ற பெயரில் போலியாக மாற்றியுள்ளார். கார் ஆவணங்களில் ரேகா என இருந்த பெயரில், அருணின் காதலி ராஜேஸ்வரி புகைப்படத்தை வைத்து ரேகா என்று ஆதார் கார்டு தயார் செய்துள்ளார்.