சென்னை:சென்னை அயனாவரம் பனந்தோப்பு காலணி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (46), தென்னக ரயில்வேயில் பணிப்புரிந்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று (பிப். 13) இரவு பணிமுடித்து சைக்கிளில் வந்த அவரை, அயனாவரம் பாலபவன்பள்ளி பின்புறம் ஐந்து நபர்கள் வழிமறித்து பணம் கேட்டும், கைப்பேசியை எடுக்கவும் முயற்சித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த சங்கர் சத்தம் போட்டுள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத நபர்கள் அருகிலிருந்த கற்களாலும், மறைத்து வைத்திருந்த கத்தியாலும் அவரை தாக்கியுள்ளனர்.
பணியாளர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சி சங்கரை தாக்கிவிட்டு அங்கிருந்து அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் ஓட்டேரி காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற காவல்துறை பலத்த காயங்களுடன் இருந்த ரயில்வே பணியாளர் சங்கரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பலத்த காயமடைந்த பணியாளர்!
பலத்த காயமடைந்த சங்கருக்குத் தலையில் ஐந்து இடங்களில் 10 தையல், இடுப்பு பகுதியில் 8 தையல் போடப்பட்டுள்ளது. இதையடுத்து சங்கர் ரயில்வே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில்வே பணியாளரை தாக்கிய அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
மூன்று பேர் கைது!
இச்சம்பவம் குறித்து ஓட்டேரி காவல்துறை வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அந்த நபர்களை தேடி வந்தனர்.
இந்தநிலையில், சிசிடிவிகாட்சிகள் அடிப்படையில் அயனாவரம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் (21), வசந்தகுமார் (19), விஜயகுமார் (19) ஆகிய மூவரை ஓட்டேரி காவல்துறை கைது செய்துள்ளனர். விசாரணையில் அஜித் குமார் மீது ஏற்கனவே இருந்த அடிதடி வழக்குகளும், விஜயகுமார் மீது ஒரு வழிப்பறி வழக்கும் உள்ளது தெரியவந்தது.
மேலும், வழிப்பறியில் தொடர்புடைய 17 வயது சிறுவனிடமும் விசாரணை செய்து வருகின்றனர். மேலும், வழிப்பறியில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளியான இளமாறன் என்பவரை காவல்துறை தீவிரமாகத் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூவர் மீதும் விசாரணைக்குப்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:போதையில் விபத்து ஏற்படுத்திவிட்டு போக்குவரத்து காவலரை தாக்கிய நபர் கைது!