மத்திய அரசு கடந்தாண்டு மூன்று வேளாண் சட்டங்களை இயற்றியது. இதற்கு எதிராக சில மாநிலங்களின் அரசுகள் எதிர்வினையாற்றின. மேலும், அச்சட்டத்திற்கு எதிராக தங்கள் மாநிலப் பேரவைகளில் தீர்மானமும் நிறைவேற்றின. அந்த வகையில் தமிழ்நாடு அரசும் இன்று இந்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது.
வேளாண் சட்டத்திற்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்மொழிந்தார். பின்னர், இது குறித்து அவர் பேசியுள்ளார். அதற்கு முன்னதாக இந்த மூன்று வேளாண் திருத்தச் சட்டங்கள் என்ன என்று பார்க்கலாம்.
- விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் சட்டம் 2020,
- வேளாண்மை உற்பத்தி மற்றும் வர்த்தக மேம்பாடு 2020,
- அத்தியாவசிய பொருள்கள் திருத்தச் சட்டம் 2020
வேளாண் சட்டத்திற்கு எதிரான தீர்மானத்தின் மீது முன்மொழிந்து ஸ்டாலின் பேசுகையில், "வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்கள் இந்தச் சட்டத்தால் லாபகரமான விலையைப் பெற முடியவில்லை. இந்தச் சட்டங்கள் - உணவுப் பொருள்கள் விளைவிக்கும் உழவர்களைவிட ஒப்பந்ததாரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும்.