சென்னை தியாகராய நகரில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் அக்கட்சியின் ஊடகப்பிரிவு பொறுப்பாளர் நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "கோவையில் நடைபெற்ற குண்டு வெடிப்பிற்கு மாநில உளவுத்துறையும், மாநில அரசும்தான் காரணம். குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிர் அணி நிர்வாகிகளை அவதூறாக பேசிய நபர் மீது திமுக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அந்த நபரை கைது செய்ய வலியுறுத்தியும் நாளை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக மகளிரணி சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கிறார்.
நேற்று அறிவாலயத்தில் திமுக செய்தித் தொடர்பாளர் ராஜீவ்காந்தி கோவை குண்டு வெடிப்பு குறித்து பல விசயங்களை கூறியதுடன் அண்ணாமலை குறித்து அவதூறான, தரக்குறைவான, ஆபாசமான கருத்தினை பேசியுள்ளர். ஆளுங்கட்சி தலைமை அலுவலகத்தில், அகில இந்தியளவிலான கட்சியின் தலைவர் குறித்து அவ்வாறு பேசியதுதான் திராவிட மாடல். பாஜக மகளிரணி நிர்வாகிகள் குறத்து ஆபாசமாக பேசியவர்கள் மீது திமுக நடவடிக்கை எடுக்கவில்லை.
பெண்களை ஆபாசமாக, தரக்குறைவாக பேசுவது திமுகவிற்கு புதிதல்ல. கட்சி தொடங்கப்பட்ட காலம் முதல் அப்படித்தான் பேசி வருகின்றனர். திமுக ராஜீவ்காந்தி இரு மாதம் முன்பு ஒரு இனத்தையே அழித்திருக்க வேண்டும் என்று பேசினார். கோவை குண்டு வெடிப்பில் கோமாளித்தன அரசியலை அரங்கேற்றுவது திமுகதான். 2019-ல் ஜமேசா மூபீர் விசாரிக்கப்பட்டு போதுமான ஆதாரம் இல்லாததால் விடுவிக்கப்பட்டார். என்றாலும் அவர் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை சார்ந்த நபர் என்று தமிழக புலனாய்வு அமைப்பிற்கு அப்போதே என்ஐஏ கூறியதால் தமிழக காவல்துறை அவரை தங்களது கடமைப்படி கண்காணித்திருக்க வேண்டும்
கடந்த ஜீலை 19ஆம் தேதி தமிழக உளவுத்துறை சார்பில் தமிழகத்தின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் கண்காணிக்க வேண்டிய 96 பேர் பட்டியலை அனுப்பினர். அதில் 89வது பெயராக ஜமேசா முபின் பெயர் இருந்தது. என்ஐஏ கூறியதன் அடிப்படையில் தமிழக உளவுத்துறை இந்த தகவலை பெற்றிருந்தது. 96 பேரையும் தமிழக உளவுத்துறையினர் தொடர்ந்து கண்காணித்தனரா..? முபின் கார் வாங்கியது, வெடி பொருள் சேகரித்தை எப்படி கண்காணிக்காமல் விட்டனர்.
கடந்த ஜூலை 30ஆம் தேதி தமிழக உளவுத்துறை சார்பில், காவல்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் அப்பாவி ஏழை இஸ்லாமிய இளைஞர்களை பணத்தாசை காட்டி அல்கொய்தா, isis அமைப்புகளின் பெயரில் மூளைச்சலவை செய்வதாக குறிப்பிட்டு கடிதம் எழுதியிருந்தனர். பண்டிகை காலங்களில் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. திமுகவில் பேசுவதற்கு ஆள் இல்லாமல் சீனியர்களை அனுப்பாமல் ராஜீவ்காந்தி வந்து நேற்று பேசினார்.