இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் "மக்களைத் தேடி மருத்துவம்" என்ற மகத்தான திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சாமனப்பள்ளி கிராமத்தில் 05.08.2021 அன்று துவக்கி வைத்தார்.
இத்திட்ட துவக்க விழா நிகழ்விடத்திலிருந்து மதுரை, கோயம்புத்தூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் சென்னை ஆகிய 7 மாவட்டங்களில் நேரடி ஒளிபரப்பு வழியாக தொடங்கப்பட்டது.
இவ்விழாவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், அரசு முதன்மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை, தேசிய நலவாழ்வு குழுமம், திட்ட இயக்குநர் - தமிழ்நாடு சுகாதார மறு சீரமைப்பு திட்டம், மாவட்ட ஆட்சியர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதலமைச்சர் பயனாளிகளின் வீட்டிற்கே சென்று தொற்று நோய்களுக்கான மருந்து பெட்டகத்தை வழங்கினார்.
மேலும் மற்றொரு நோயாளியின் வீட்டிற்குச் சென்று அவருக்குத் தேவையான இயன் முறை சிகிச்சை சேவையினை பார்வையிட்டு ஊக்கப்படுத்தினார். தொடர்ந்து, நோயாளிகளின் வீட்டிற்கே சென்று சேவை அளிப்பதற்கான வாகனங்களை இத்திட்டத்தின் கீழ் துவக்கி வைத்தார்.
இத்திட்டமானது அனைவருக்கும் நலவாழ்வு திட்டத்தின் கீழ் உள்ள 50 ஊரக வட்டாரங்களிலுள்ள 1172 அரசு துணை சுகாதார நிலையங்கள், 189 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 50 மேன்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் செயல்படுத்தப்பட்டது.
மேலும் 3 மாநகராட்சிகளில் (சென்னை, கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி) தலா ஒரு மண்டலத்திலுள்ள 106 பகுதி சுகாதார நிலையத்திலும் மற்றும் 21 நகர ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தொடங்கப்பட்டது.