சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் என்பது சென்னை அடையாளங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.27) இக்கோயில் தெப்பக்குளத்தில் உள்ள ஆயிரக் கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகம் இது குறித்த தகவலை மீன்வளத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் இந்து சமய அறநிலையத் துறைகளுக்கு தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி பணியாளர்கள் இறந்த மீன்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கோயில் குளத்தில் உள்ள மீன்களை அகற்றிய நிலையில், குளத்தில் உள்ள நீரில் ஏதாவது நச்சுத்தன்மை உள்ளதா, மீன்கள் நோய் வாய்ப்பட்டுள்ளதா, குளத்தில் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளதா? அல்லது கோயில் குளத்தில் உள்ள மீன்களுக்கு பக்தர்கள் அளித்த உணவால் மீன்கள் இறந்தனவா உள்ளிட்ட பல்வேறு கோணங்களில், மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
கபாலீஸ்வரர் கோயில் குளத்தின், மீன்கள் இறப்பு குறித்து பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "இன்று காலை 7 மணியளவில், கோயில் நிர்வாகம் சார்பில், தேனாம்பேட்டை மண்டல அலுவலகத்திற்கு மீன்கள் இறந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டன. இதனால் 25 பணியாளர்களுக்கு மேல் மயிலாப்பூர் குளத்தில் இறந்த மீன்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.