சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் நினைவாக மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு ஆயிரம் புத்தகங்களை நன்கொடையாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமாெழியிடம் வழங்கி உள்ளனர். ஆசியாவிலேயே 2 வது பெரிய நூலகமாக அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் சென்னையில் அமைந்துள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது.
இதனைத்தொடர்ந்து தென்தமிழகத்தினர் பயன்பெறும் வகையில் கலைஞர் நினைவு நூலகம் பல்வேறு புதிய அம்சங்களுடன் கட்டப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 3ஆம் தேதி அறிவித்திருந்த நிலையில், விரைவில் அந்த நூலகம் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மறைந்த முன்னாள் முதலவர் கருணாநிதியின் நினைவாக மதுரையில் இந்த நூலகம் 110 கோடி செலவில் பல்வேறு வசதிகளுடன் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தென்மாவட்டங்களில் வசிப்பவர்களின் அறிவுப்பசியை போக்குவதற்காக மதுரையில் 8 தளங்களுடன், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளை கொண்ட மாபெரும் நூலகமாக கட்டப்பட்டுள்ளது. மேலும் குழந்தைகள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், போட்டித்தேர்வர்கள் என அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் போட்டித்தேர்வு மாணவர்களுக்கான இணைய வசதியுடன் கூடிய சிறப்புப்பிரிவு, பார்வைத்திறன் குறைந்த வாசகர்களுக்காக பிரெய்லி வகை நூல்கள், குளிர்சாதன வசதியுடன் அரங்குகள், கருணாநிதியின் படைப்புகள், பேச்சுகள் இடம்பெறும் எழிலார்ந்த கூடம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.