சென்னை: பாலை அதிக விலைக்கு விற்பவர்கள் பிணத்தை வைத்து வியாபாரம் செய்வதற்குச் சமம் எனத் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச்சங்க நிறுவனரும் தலைவருமான ஆ. பொன்னுசாமி கடுமையாக விமர்சனம்செய்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில் பேசியிருப்பதாவது:
144 தடை உத்தரவு தமிழ்நாடு முழுவதிலும் நடைமுறையில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களை விற்பனைசெய்யும் பால் கடைகள் மளிகைக் கடைகள் உணவுக் கடைகளை மூடுமாறு காவல் துறையினர் வற்புறுத்துகின்றனர்.
எங்களுக்கும் குடும்பங்கள் குழந்தைகள் அனைத்தும் உள்ளன, எங்களுக்கும் நோய் தொற்று உண்டாகும். இவற்றை எல்லாம் கடந்து நாங்கள் கடைகளைத் திறந்துவைப்பது சேவை நோக்கில் மட்டுமே . பால் முகவர்கள் கடைகளில் மட்டுமே பால் தங்கு தடையின்றி கிடைக்கும். அதுவும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே காலை 3.30 மணி முதல் காலை 9 மணி வரை பால் கிடைக்கும்.