பொன்பரப்பி கலவரத்தை கண்டித்தும் ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பேசியதாவது:
பொன்பரப்பியில் நடந்தது ஜனநாயக படுகொலை. இது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். திருமாவளவன் சிதம்பரத்தில் தோற்றுவிடக் கூடாது என்பது முக்கியம் இல்லை. ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது என்பதுதான் முக்கியம். அதனால், அங்கு மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும். பாசிச பா.ஜ.க. கட்சியின் ஒரு அங்கமாக தமிழகத்தில் பாமக உள்ளது. இவர்களிடம் இருந்து இந்துக்களையும், வன்னியர்களையும் காப்பாற்ற வேண்டும். தமிழகத்தின் இரு துருவங்களாக திமுக, அதிமுக இருக்கிறது. இதில் ஒன்றை அடித்து காலிசெய்து விட்டு, ஒரு துருவத்திற்கு வர வேண்டும் என்ற பாமகவின் திட்டம், உங்கள் பாட்டன் வந்தாலும் முடியாது.
தலித் மக்களுக்கு நல்லது செய்வது என்பதல்ல ராமதாஸின் நோக்கம். எதிர்ப்பை உருவாக்கி அதன் மூலம் வன்னியர்களின் ஆதரவை பெற வேண்டும். இதை பா.ஜ.க. விடமிருந்து கற்றுக்கொண்டனர். தனது அரசியல் உத்தியாக தனது சாதியை பயன்படுத்துகிறவர்தான் ராமதாஸ். தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காகத்தான் எனக்கு திமுகவின் இருப்பு தேவைப்படுகிறது. நான் என்ன அன்புமணியை போல, என்னையும் முதலமைச்சர் ஆக்குங்கள் என்று சொல்லிக்கொண்டா வண்டியில் ஏறுகிறேன். நீங்கள் முதலமைச்சராகுங்கள் வாழ்த்துகள். நான் மக்களுக்கு தொண்டு செய்கிறேன்.
நான் அன்புமணியை அழைக்கிறேன் வாருங்கள். எங்கள் அணியின் ஒன்றியச் செயலாளரை அனுப்புகிறேன். தமிழ்த்தேசியம் பற்றி பேசுவோம். நான் என் தம்பிக்களுக்கு கல் எடுத்து அடிக்க சொல்லிக் கொடுக்கவில்லை. அப்பாவி மக்களை கண்ணீர் சிந்தவைத்த, அப்பாவி மக்களை ரத்தம் சிந்தவைத்த உங்களுக்கு, நிச்சயம் காலம் பதில் சொல்லும். வன்னியர் சமுக இளைஞர்களே ராமதாஸ் உங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். கலைஞர் நீங்கள் படிக்க வேண்டும் என்று இடஒதுக்கீடு பெற்று கொடுத்தார். ஆனால் உங்கள் தலைவன் இன்னமும் காடுகளில் பதுங்க சொல்கிறார், கள்ள சாரயம் குடித்துவிட்டு கலவரம் செய்ய சொல்கிறார். அப்பாவி வழக்கறிஞர் பாலு, வீணாக வாழ்க்கையை வீணடித்து கொள்ளாதீர்கள். 7 தொகுதியில் ஏன் உங்களுக்கு ஒரு தொகுதி கொடுத்து போட்டியிட வைக்கவில்லை. திண்டுக்கல்லில் என்ன இருக்கிறது அங்கு போய் தொகுதி வாங்குகிறார்.
நான் அரசியலில் இருந்து விலகினால் வன்னியர் சமுகத்துக்கு நலன் பயக்கும் எனில், நான் அரசியலிலிருந்து விலக தயார். ஆனால் தலித் வெறுப்பு என்கிற அடிப்படையில் என்னை பலிகடாவாக்கி உங்கள் மகனை முதல்வராக்க நினைக்காதீர்கள். எனக்கு தேவை உழைக்கும் மக்களிடையே இருக்கும் ஒற்றுமைதான். பானையை நீங்கள் உடைத்திருக்கலாம் ஆனால் எங்கள் கூட்டணியை, கொள்கையை, நிலைபாட்டை உடைக்க முடியாது, என்று காட்டமாக முடித்தார் திருமாவளவன்.