தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாதிக்கான தலைவரல்ல;தமிழ் சமூகத்திற்கான தலைவர் திருமா! - thirumavalavn bday

சமூக நீதிக்கான போராட்டம், சனாதனத்திற்கு எதிரான போராட்டம், மாநில உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் முன்நிற்கும் திருமாவளவனை தமிழ் சமூகம் தலைமையேற்க அழைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

thol thirumavalavan MP - B'Day SPL  திருமாவளவன் எம்பி  சிதம்பரம் மக்களவை உறுப்பினர்  திருமாவளவன் பிறந்தநாள்  thirumavalavn bday  thirumavalavan birthday
சாதிக்கான தலைவரல்ல;தமிழ் சமூகத்திற்கான தலைவர் திருமா

By

Published : Aug 17, 2020, 6:51 PM IST

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் ஒட்டுமொத்த தமிழர் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்துவருபவர். ஒடுக்கப்படுபவர்களின் பக்கம் நின்று அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கும் அவர் இன்று தனது 59ஆவது அகவையில் அடியெடுத்து வைத்துள்ளார்.இளம் வயதில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு கொண்டு அரசியலுக்கு வந்தவர், இன்றும் அதே லட்சியத்துடனே இயங்கி வருகிறார்.

தமிழ்நாட்டு அரசியலில் சென்னை எவ்வளவு முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குகிறதோ, அதே அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற நகரம் மதுரை. அந்த மதுரை நகரத்தில்தான் திருமாவளவன் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். 80-களில் இந்தியா முழுவதும் நக்சல்பாரி இயக்கத்தின் தாக்கம் தீயாகப் பரவியது. அதே காலகட்டத்தில் மகாராஷ்டிராவில் தலித் பேந்தர் இயக்கத்தின் செயல்பாடு தீவிரமாக இருந்தது.

திருமாவளவன்

அதையொட்டி தமிழ்நாட்டில் உருவாகிய பாரதிய தலித் பேந்தர் என்ற அமைப்பில் இணைந்து திருமா செயல்படத்தொடங்கினார். இயல்பிலே அவ்வமைப்பு தேர்தல் அரசியலைப் புறக்கணித்து மக்களை அரசியல்படுத்தவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் கட்டப்பட்டதால், அதிரடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டது. அதனாலேயே தென்மாவட்டங்களில் அவ்வமைப்பு பெரும் எழுச்சியைக் கண்டது. அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மலைச்சாமி என்பவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பின்பு அவ்வியக்கத்தின் தலைவராக திருமா பொறுப்பேற்று செயல்பட்டார்.

1999ஆம் ஆண்டு மூப்பனாரின் அறிவுரையை ஏற்று தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த அவர், போட்டியிட்ட முதல் முறையே இரண்டு லட்சம் வாக்குகளை பெற்று தமிழ்நாட்டு அரசியலின் கவனத்தை தன்பக்கம் திருப்பினார். பின் தொடர்ச்சியான செயல்பாடுகளால் வளர்ச்சி பெற்ற திருமாவளவனுக்கு மக்கள் ஆதரவு பெருகத்தொடங்கியது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்து ஒருமுறை சட்டப்பேரவை உறுப்பினாரனர். தற்போது அதே கூட்டணியின் மூலம் மக்களவையில் அங்கம் வகித்துவருகிறார்.

இளவயது திருமாவளவன்

2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவரின் முதல் உரை, தான் யார் என்பதை அந்த மக்களவை முழுவதும் ஒலிக்கச் செய்தது.சிதறிக்கிடந்த மக்களையும், விளிம்பு நிலையில் இருந்த மக்களையும் ஒன்றிணைத்து அரசியல்படுத்தியிருக்கிறார்; தன் தொண்டர்களை ஓட்டுகளுக்காகவும் அரசியல் லாபத்திற்கும் பயன்படுத்தாமல், கருத்தியல் தளத்தில் வளர்த்தெடுக்கிறார் திருமா. கல்வி ஒன்றுதான் சமூக மாற்றத்திற்கான அடிப்படை என்ற அம்பேத்கரின் கருத்தை உள்வாங்கி தொடர்ச்சியாக கல்வியின் அவசியத்தையும், அரசியல் அதிகாரத்தின் தேவையையும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகிறார்.

பழநெடுமாறனுடன் போராட்டக்களத்தில் திருமா

தமிழ் மொழி மீது மாறாப்பற்று கொண்டு தனது தந்தைக்கு தொல்காப்பியர் என பெயர் மாற்றினார். மேலும், பல்லாயிரக்கணக்கான விசிக தொண்டர்களுக்கு தமிழில் பெயர் சூட்டினார். திமுக, திக ஆரம்பகாலத்தில் தமிழில் பெயர் சூட்டுவதை ஊக்கப்படுத்தி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்புரையை ஏற்படுத்தியிருந்தாலும், அதனைத் தொடர்ந்து செய்துவருபவர் திருமாவே.இந்திய அளவில் தலித் அரசியல் பேசும் பல்வேறு கட்சிகளும், அம்பேத்கரை ஏற்று நடப்பதாக கூறிக்கொள்ளும் பல இயக்கங்களும் இன்று இந்துத்துவக் கருத்தியலுக்கு பலியாகிய போதிலும், திருமாவளவன் அக்கருத்தியலுக்கு எதிராக தமிழ் அடையாளத்துடன் போராடிவருகிறார்.

பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய கொள்கைகளை உள்வாங்கி, சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம், மகளிர் விடுதலை, பாட்டாளி வர்க்க விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு என்ற ஐந்து கொள்கைகளை முன்வைத்து அனைத்து மக்களுக்குமான பணியை அவர் செய்துவந்தாலும், அவரை சாதிய வட்டத்திற்குள் அடக்கவே பெருமளவில் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன. இருப்பினும், தன்னுடைய செயல்பாட்டால் அந்த வட்டத்திற்குள் அவர் அகப்படவில்லை.

சமூக நீதிக்கான போராட்டம், சனாதனத்திற்கு எதிரான போராட்டம், மாநில உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் முன்நிற்கும் திருமாவளவனை தமிழ் சமூகம் தலைமையேற்க அழைக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

இதையும் படிங்க:'உடனே குழு அமைத்து விரைந்து ஓபிசி இடஒதுக்கீடுக்கான சட்டம் இயற்ற வேண்டும்' - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details