அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள் என உலகம் முழுவதும் மொத்தம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொலைபேசி எண்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம்தான் சமீபத்திய ஹாட் டாப்பிக். பெகாசஸ் என்ற உளவுச் செயலியின் மூலம் இந்தியாவிலும் 300-க்கு மேற்பட்டோரின் தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்தாகத் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும், மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், "பெகாசஸ் விவகாரத்தை ஒன்றிய அரசு மறுத்தாலும், ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இந்தப் பிரச்சினை குறித்து விசாரிக்க வேண்டும்.
இந்தக் குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை அளிக்க ஏதுவாக உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் சுயேச்சையான ஒரு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று ஒன்றிய அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
உளவு பார்க்கும் பெகாசஸ்
இஸ்ரேல் நாட்டுப் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள பெகாசஸ் என்ற உளவுச் செயலியை அரசுகளுக்கு மட்டுமே விற்பது என்று அந்நாடு முடிவுசெய்திருக்கிறது. அந்தச் செயலி இந்தியாவிலும் பயன்படுத்தப்படுகிறது என்று 2019ஆம் ஆண்டிலேயே குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதுபோல பல நாடுகளிலிருந்தும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதையொட்டி உலகப் புகழ்பெற்ற ஊடக நிறுவனங்கள் ஒன்றிணைந்து இதற்கெனத் தனியே புலனாய்வு நடவடிக்கையில் ஈடுபட்டன. அதனடிப்படையில் இப்பொழுது சுமார் 50 ஆயிரம் தொலைபேசி எண்கள் பெகாசஸ் செயலியால் பயன்படுத்தப்பட்டது தெரியவந்துள்ளது.