சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ஒன்றிய அரசு இன்று (பிப்.01) தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கை ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை ஏமாற்றுகிற அறிக்கையாகும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மை சமூகத்தவருக்கான திட்டங்கள் பலவற்றுக்கு நிதியைக் குறைத்து அவர்களுக்குத் துரோகமிழைக்கும் இந்த பட்ஜெட், நாட்டில் பாகுபாடுகளை அதிகரிக்கச் செய்யவேண்டும் என்ற சனாதன நோக்கத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
பாஜக அரசின் இந்த மக்கள்விரோத பட்ஜெட்டை விசிக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மோடி அரசால் வஞ்சிக்கப்படும் மக்கள் அடுத்து வரும் மாநிலத் தேர்தல்களிலும், பொதுத் தேர்தலிலும் சரியான பாடத்தை அவர்களுக்குப் புகட்டுவார்கள். குடியரசுத் தலைவர் உரையிலும், பொருளாதார ஆய்வு அறிக்கையிலும், இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருக்கிறது என்ற தோற்றத்தை உருவாக்கிய பாஜக அரசு, இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அதே ஏமாற்று வேலையைத் தொடர்ந்துள்ளது.
நடுத்தர வர்க்க மக்களுக்கு வருமான வரி விதிப்பில் மிகப்பெரிய சலுகை அளித்து விட்டது போல் நிதி அமைச்சர் தனது பட்ஜெட் உரையில் ஆரவாரமாக அறிவித்தார். ஆனால் அவரது அறிவிப்பால் 2 கோடி ரூபாய்க்கு மேல் வருட வருமானம் ஈட்டுகிறவர்களே பயனடைவார்கள், மாத சம்பளம் வாங்கும் மற்ற நடுத்தர வர்க்கப் பிரிவினர் எவருக்கும் இந்த அறிவிப்பால் எந்தவொரு பயனும் கிடையாது.
பாஜக அரசு மக்களுக்கு அடிப்படைத் தேவையான கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீட்டைத் தொடர்ந்து குறைத்து வருகிறது. தேசியக் கல்விக் கொள்கையில் கல்விக்காக உள்நாட்டு உற்பத்தியில் ( ஜிடிபி) 6 % ஒதுக்குவோம் என்று அறிவித்தது பாஜக அரசு. ஆனால் கல்விக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு 2.64% ஆக இருந்தது. அதை இந்த ஆண்டு 2.5% ஆகக் குறைத்து விட்டது. அதுபோலவே சுகாதாரத்துக்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு ஜிடிபியில் 2.2% ஆக இருந்தது. அது இப்போது 1.97% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களைச் சார்ந்த மக்கள் பயனடைவதற்கென உருவாக்கப்பட்ட தேசிய வேலை உறுதித் திட்டத்துக்கான நிதியை மோடி அரசு வெகுவாகக் குறைத்து இருக்கிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அந்தத் திட்டத்துக்கென 73 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஆண்டோ அது 60 ஆயிரம் கோடியாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. பட்டியலினத்தவர் பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு என்பது குறைவாகவே உள்ளது.