தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை ஏர்போர்டில் முதன்முறை: பாதுகாப்புப் பணியில் பெல்ஜிய மாலினோயிஸ் மோப்ப நாய்கள் - பெல்ஜிய மாலினோயிஸ் வகை மோப்ப நாய்கள்

சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளுக்காக உலக நாடுகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெல்ஜிய மாலினோயிஸ் வகையைச் சார்ந்த இரண்டு மோப்ப நாய்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இவை வெடிகுண்டு, போதைப்பொருள் உள்ளிட்டவற்றை விரைவில் கண்டுபிடிப்பத்தில் அதிக மோப்ப சக்தி உடையது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை விமான நிலையத்தில் இது முதன்முறை: பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெல்ஜிய மாலினோயிஸ் வகை மோப்ப நாய்கள்
சென்னை விமான நிலையத்தில் இது முதன்முறை: பாதுகாப்பு பணியில் ஈடுபடும் பெல்ஜிய மாலினோயிஸ் வகை மோப்ப நாய்கள்

By

Published : Jan 11, 2023, 3:49 PM IST

Updated : Jan 11, 2023, 9:24 PM IST

சென்னை ஏர்போர்டில் முதன்முறை: பாதுகாப்புப் பணியில் பெல்ஜிய மாலினோயிஸ் மோப்ப நாய்கள்

சென்னை விமான நிலையம் உட்பட இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்புப் பணியில் மத்திய தொழிற்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். பயணிகளின் உடைமைகள், வாகன சோதனை போன்ற பாதுகாப்பு பணிகளுக்காக மத்திய தொழிற்படையினர் மோப்ப நாய்களை பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் மற்றும் வாகனங்களில் வெடிகுண்டு உள்ளிட்ட சில சோதனைகளுக்கு இதுவரை பயிற்சிகளில் சிறந்து விளங்கிய ஏழு மோப்ப நாய்கள், சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவில் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு, பெல்ஜிய மாலினோயிஸ் வகையைச் சேர்ந்த 2 நாய்க் குட்டிகளை சென்னை விமான நிலையப் பாதுகாப்புப் பிரிவில் சேர்த்து அதற்கு 'பைரவா' மற்றும் 'வீரா' எனப் பெயர் சூட்டினர். பின்னர் இந்த நாய் குட்டிகள் மோப்ப சோதனைகளுக்காக 6 மாத பயிற்சிக்கு பெங்களூருவில் உள்ள பயிற்சி கல்லூரிக்கு அனுப்பப்பட்டது.

இதையடுத்து 6 மாதகால பயிற்சி முடிந்து சென்னை விமான நிலையப் பாதுகாப்புப் பணியில், இரண்டு பெல்ஜிய மாலினோயிஸ் வகையைச் சேர்ந்த வீரா, பைரவா ஆகிய இரண்டு மோப்ப நாய்களையும் பணியில் சேர்க்கும் நிகழ்ச்சி, ஜனவரி 9ம் தேதி, சென்னை பழவந்தாங்கலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார், மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி ஸ்ரீராம் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு இரண்டு மோப்ப நாய்களுக்கும் கேக் வெட்டி கழுத்தில் பெல்ட் அணிந்து வரவேற்பு அளித்தனர். இதையடுத்து இரண்டு மோப்ப நாய்களும் வெடிகுண்டு பொருட்களை எப்படி கண்டுபிடிக்கும் என்பதை செய்து காட்டின.

பெல்ஜிய மாலினோயிஸ் நாய்கள் உலகின் பல நாடுகளில் பாதுகாப்புப் பணியில் உள்ளன. இந்தியாவிலேயே சென்னை விமான நிலையத்தில் பெல்ஜிய மாலினோயிஸ் நாய்கள் முதல் முறையாக சேர்க்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து விமான நிலைய இயக்குநர் சரத்குமார் கூறுகையில், “சென்னை விமான நிலையத்தில் பெல்ஜிய மாலினோயிஸ் வகையைச் சார்ந்த வீரா, பைரவா என்கிற இரண்டு மோப்ப நாய்களை பாதுகாப்புப் பிரிவில் சேர்த்து உள்ளோம்.

இந்த இரண்டு நாய்களும் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்பு இன்று பாதுகாப்புப் பணியில் சென்னை விமான நிலையத்தில் சேர்ந்து உள்ளது. மோப்ப சக்தி அதிகம் உள்ளதால் விரைவில் வெடிகுண்டு, போதைப் பொருட்கள் உள்ளிட்டவற்றை விரைவில் கண்டுபிடிப்பதில் இரண்டு மோப்ப நாய்களும் உதவியாக இருக்கும். இதனால், சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாக இருக்கும். மேலும் காவல்துறையைப் போல் இந்த மோப்ப நாய்களும் விமான நிலையத்தின் பாதுகாப்பில் சிறந்து விளங்கும்.

சென்னை விமான நிலைய விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த பன்னாட்டு முனையத்தின் பணிகள் சில மாதங்களில் முடிக்கப்படும். அதன் பின்பு சென்னை விமான நிலையம் புதிய கார் பார்க்கிங், திரையரங்கம், மால் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் திகழும். புதிய முனையும் திறக்கப்பட்ட பிறகு அதில் ஒன்று பன்னாட்டு முனையமாகவும்; ஒன்று உள்நாட்டு முனையமாகும் செயல்படும்” என்று தெரிவித்தார்.

மத்திய தொழில் பாதுகாப்புப் படை டிஐஜி ஸ்ரீராம், “சென்னை விமான நிலைய வரலாற்றில் பெல்ஜிய மாலினோயிஸ் வகையைச் சார்ந்த மோப்ப நாய்கள் முதல்முறையாக பாதுகாப்புப் பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. ஏற்கனவே சென்னை விமான நிலைய பாதுகாப்புப் பிரிவில் 7 மோப்ப நாய்கள் உள்ளன. தற்போது இரண்டு நாய்கள் சேர்க்கப்பட்டு ஒன்பது மோப்ப நாய்களாக அதிகரித்துள்ளது.

சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதாலும், புதிய கார் பார்க்கிங், திரையரங்கம், மால்கள் உள்ளிட்டப் பல்வேறு கட்டமைப்புகள் திறக்கப்பட உள்ளதாலும் பாதுகாப்புப் பிரிவில் இன்னும் அதிகமான மோப்ப நாய்கள் தேவைப்படுகின்றன. இதனால் மேலும் 8 மோப்ப நாய்களை விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கானப் பணிகள் நடைபெற்று வருகிறது” எனத்தெரிவித்தார்.

இதையும் படிங்க: வண்டலூர் அருகில் நடக்கும் 23-வது அகில இந்திய காவல் துறை துப்பாக்கிச்சுடும்போட்டி

Last Updated : Jan 11, 2023, 9:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details