தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல’ - துரைமுருகன் அறிக்கை - துரைமுருகன்

சென்னை: தேர்தல் முடிவடைந்து புதிய அரசு ஆட்சி அமைப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை ஆளுநர் நியமித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

துரைமுருகன்
துரைமுருகன்

By

Published : Apr 8, 2021, 3:55 PM IST

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் பொதுத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. ஆட்சி மன்றத்திற்கான சூழலை இந்தத் தேர்தல் உருவாக்கிருக்கின்ற நல்தருணம் இது. புதிய அரசு பல புதிய சிந்தனைத் திட்டங்களோடு பதவிக்கு வரும் என்ற நிலை மிக தெளிவாகத் தெரிகிறது.

ஓட்டு எண்ணிக்கைக்கு இடைப்பட்ட இந்த ஒரு மாதம் காலம் எந்த முடிவு எடுக்காமல் இருப்பது தான் மரபு. ஆனால், புதிய அறிவிப்புகளை, அதுவும் பல்வேறு பல்கலைக்கழகங்களில், அதன் நிர்வாகப் பொறுப்பை பல ஆண்டுகளுக்கு ஏற்கப்போகும் துணைவேந்தர்களின் பெயர்களை ஆளுநர் அவசர அவசரமாக வெளியிட்டிருப்பது ஆளுநர் பதவிக்கு அழகல்ல.

  • காந்திராம கிராமிய பல்கலைக்கழக துணை வேந்தராக எஸ். மாதேஸ்வரன்,
  • கால்நடை பல்கலைக்கழக துணை வேந்தராக டாக்டர் செல்வகுமார்

இவை ஆளுநர் அறிவித்ததாக செய்தித்தாள்களில் வெளிவந்த அறிவிப்புகள்.

பல நாள்களாக நிரப்பப்படாமல் இருந்த இந்தப் பதவிகளை புதிய அரசு வந்து நிரப்பினால் இமயமலை என்ன இரண்டாகவா பிளந்து விடும்?

இந்த இரண்டு நியமனங்களும் போதாதென்று தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாய உறுப்பினராக, கிரிஜா வைத்தியநாதனை மத்திய அரசு அதன் பங்கிற்கு நியமித்திருக்கிறது. ”தேர்தல் வருவதற்கு முன்பு இருந்த நடைமுறையில் இருந்த விஷயங்கள்தான் இவை. இதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது" என்று ஆயிரம் காரணங்களை ஆளுநர் மாளிகை கூறினாலும், ”பொறுத்ததுதான் பொறுத்தீர், இன்னும் ஏன் ஒரு மாத காலம் பொறுக்கக்கூடாது?” என்பதுதான் எனது கேள்வி.

முறையான துணைவேந்தர்களை நியமிக்காததால், அகில உலக புகழ்பெற்ற சென்னை பல்கலைக்கழகம் எப்படி சீர்கெட்டு அழிந்து நிற்கிறது என்பதை பல்வேறு ஊடகங்கள் எடுத்துக் காட்டி இருக்கின்றன. முடிந்தால் ஆளுநரின் செயலாளர்கள் அவரது பார்வைக்கு இதனைக் கொண்டு செல்லட்டும். இந்த அவசரம் ஆளுநருக்கு அழகல்ல!” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:’உன்னால் முடியும் தம்பி’ - நம்பிக்கையை விதைத்த எம்.எஸ். உதயமூர்த்தியின் பிறந்தநாள்

ABOUT THE AUTHOR

...view details