தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான் - முதலமைச்சர் - மாற்றுத் திறனாளி

''மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையைத்துறை அலுவலர்கள் தான் காப்பாற்ற வேண்டும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By

Published : Jun 6, 2022, 5:47 PM IST

Updated : Jun 6, 2022, 9:20 PM IST

சென்னை: மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு,“அனைத்தும் சாத்தியம்” என்ற மாற்றுத் திறனாளிகளுக்கான அருங்காட்சியகத்தை திறந்து வைத்து, மாற்றுத் திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான் - முதலமைச்சர்

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் தாங்கள் பயன்படுத்த விரும்பும் உதவி உபகரணங்கள் வகை மற்றும் மாதிரியின் தேர்வினை வழங்கும் வகையில் நேரடி மானியம் வழங்கும் திட்டத்தை (உதவி சாதனங்களை வழங்கும் தேர்வு அடிப்படையிலான அமைப்பு) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக ரூ.9.50 கோடி மதிப்பில் 7,219 நபர்கள் பயன்பெறும் வகையில், மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், காதுக்குப் பின்னால் அணியும் காதொலிக் கருவிகள் மற்றும் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் ஆகிய 5 வகையான உபகரணங்களில், 36 மாதிரிகளை பயனாளிகள் விருப்பத்தேர்வு முறைக்கு அறிமுகப்படுத்தி, 6 பயனாளிகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை: ’ரூபாய் 360 கோடியே 21 லட்சம் அளவுக்கு 2,11,505 பயனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் கட்டணமில்லாப் பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமன்றி, உலகிலேயே முன்மாதிரி திட்டமாக ரூ.1,709 கோடி செலவில் “உரிமைகள்” என்ற திட்டம் செயல்படுத்தப்பட தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவையாற்றியவர்களுக்கு மாநில அளவிலான விருதும் வழங்கப்படுகிறது. தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்கான மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில், ரூபாய் 1 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

நம்பிக்கை கொடுக்கும் திமுக அரசு: இந்தத் துறையானது ஸ்கூட்டர் கொடுத்தோம், கருவிகளைக் கொடுத்தோம், நிதி கொடுத்தோம் என்று மட்டும் சொல்லாமல், நம்பிக்கையும் கொடுத்தோம் என்று சொல்லும் அந்த அளவுக்கு இந்தத் துறை செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அத்தகைய நம்பிக்கையை உருவாக்குவது சாதாரணமான காரியம் அல்ல. அதற்கு இந்தத்துறையில் பணியாற்றக்கூடிய அலுவலர்கள் முதல் சாதாரண அலுவலர் வரைக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியை ஆற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

துறையை நோக்கி வருபவர்கள் சிலர் தான். அந்த சிலரது கோரிக்கைகளை செவி மடுத்துக்கேட்க வேண்டும். உடனடியாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், சில வாரங்களுக்குள்ளாவது நிறைவேற்றித்தர வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு நம்பிக்கை இந்த அரசாங்கம் தான். அந்த நம்பிக்கையை துறை அலுவலர்கள் தான் காப்பாற்ற வேண்டும்.

இன்றைக்கு இந்தத் துறையில் சிலவற்றில் நாம் இன்னும் அதிக கவனம் செலுத்தி, மாற்றுத் திறனாளிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபட வேண்டும் என்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்கிறேன். UDID அட்டைகள் வழங்குவதில் கொஞ்சம் சுணக்கம் தெரிகிறது. அது உடனடியாக நீக்கப்பட்டு, கார்டு வழங்குவது விரைவுபடுத்தப்பட வேண்டும். அனைத்து திட்டங்களின் பயன்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்குதடையின்றி சென்றிட, ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை அளிப்பதில் சுகாதாரம், குழந்தைகள் நலத்துறை, கல்வித்துறை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். நலத்திட்டங்களை கொடுப்பதோடு, மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும்.
பின்னடைவுப் பணியிடங்களை விரைந்து நிரப்புவதோடு, தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு நல்ல வேலை கிடைப்பதற்கு முயற்சி எடுக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்காக நல வாரியம் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான ஆலோசனை வாரியம் போன்றவற்றின் கூட்டங்களை அடிக்கடி நடத்தி, மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒரு புதிய அத்தியாயத்தை இதுவரை எந்த அரசும் உருவாக்காத அத்தியாயத்தை உருவாக்கிட வேண்டும் என்று இத்துறையின் அமைச்சர் என்ற முறையிலும் நான் கேட்டுக் கொள்கிறேன்’ என்றார்.

இதையும் படிங்க:'அனைத்தும் சாத்தியம்' மாற்றுத்திறனாளிகளுக்கான அருங்காட்சியகம் திறப்பு!

Last Updated : Jun 6, 2022, 9:20 PM IST

ABOUT THE AUTHOR

...view details