சென்னை: திருவேற்காடு நகராட்சி அலுவகத்திற்கு 10வது வார்டைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள், கையில் பதாகையுடன் வந்து திடீரென கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா மக்கள் பணியை செய்யவில்லை என்றும், அடிப்படைத் தேவைகளை செய்யக்கூட லஞ்சம் கேட்பதாக குற்றம் சாட்டினர்.
அப்போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் திடீரென குடத்தில் கொண்டு வந்த கழிவு நீரை நகராட்சி வாசலில் கொட்டி, தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தங்கள் பகுதியில் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்ட கால்வாய் பணியால், விபத்துகள் ஏற்படுவதோடு, கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகி நோய்த்தொற்று ஏற்படுவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சாலை அமைக்கவும் நகராட்சியில் முன்வரவில்லை என்று குற்றம் சாட்டிய அவர்கள், நகராட்சி ஆணையர் ஜகாங்கீர் பாஷா, காலி மனைகளுக்கு கூட வரி வாங்க லஞ்சம் வாங்குவதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், நகராட்சியில் உள்ள நகர அமைப்பு ஆய்வாளர் விக்னேஸ்வரன், கட்டட அனுமதி பெற 40 ஆயிரம் வரை லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.