சென்னை:திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 12ஆம் தேதி தொடர்ச்சியாக 4 ஏடிஎம் மையங்களை உடைத்தும், கொளுத்தியும் ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல மாநிலங்களுக்குச் சென்று போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, காரில் வந்த 6 வடமாநில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகளில் பதிவான காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை நடத்தியபோது, ஆந்திர மாநிலம் - சித்தூரில் கடந்த மாதம் 29ஆம் தேதி கொள்ளையர்கள் காரை திருடி கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் கார் சென்ற இடங்களில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, கர்நாடகா கோலார் பகுதியில் உள்ள லாட்ஜுக்கு கொள்ளையர்கள் சென்றது தெரியவந்தது. பின்னர், லாட்ஜில் இருந்து கன்டெய்னர் மூலமாக அரியானா மாநிலத்திற்கு தப்பிச்சென்றது தெரியவந்தது. குறிப்பாக கொள்ளையடித்த பணத்தை பங்கிட்டு பல்வேறு குழுக்களாக கொள்ளையர்கள் பிரித்து சென்றதும் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளில் பதிவான அடையாளங்கள் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து ஹரியானாவில் பதுங்கி இருந்த கொள்ளை கும்பலின் தலைவன் முகமது ஆரிப் (35) மற்றும் ஆஜாத்(37) ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்த இவர்களிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் மற்றும் ஒரு வாகனத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.