திருப்பூர்:ஆடிப்பெருக்கு காவிரிக் கரையோரமும், அதன் துணை ஆற்றங்கரைப் பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். ஆடி மாதம் 18ஆம் தேதி இந்த ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் ஆறுகளில் புதுவெள்ளம் பொங்கி வரும் வேளையில், ஆறுகளை வழிபட்டு, கோயில்களில் வழிபாடு செய்வது காலங்காலமாக நடந்து வருகிறது.
காவிரியின் துணை ஆறுகளான பவானி, நொய்யல் ஆறுகள் பாயும் மாவட்டங்களிலும் இந்தப் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில், காவிரியின் துணை ஆறான நொய்யல் ஆற்றங்கரை மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டப் பகுதிகளில் ஆடிப்பெருக்கு பண்டிகையை இன்றளவும் பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.
இப்படி ஆற்றையும், ஆற்றுவழி நீரையும் கொண்டாடும் நம்மவர்கள், நொய்யல் ஆற்றின் தடுப்பணை ஒன்றுக்காக உயிர்த்தியாகம் செய்த நல்லம்மாள் என்கிற சிறுமிக்கு கோயில் கட்டி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழிபாடு செய்து வருகிறார்கள். அதாவது, காவிரி ஆற்றின் துணை ஆறான நொய்யல் ஆற்றின் பாசனத்திட்டம், சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக கொங்கு சோழர்கள் காலத்தில் (கி.பி 1000 - கி.பி 1200) சிறப்பாக கட்டமைக்கப்பட்டது.
நொய்யல் ஆறு உருவாகின்ற கோவை, பூண்டி அடிவாரத்திற்கு அடுத்து, சித்திரைச் சாவடி தடுப்பணையில் ஆரம்பித்து கரூரில் காவிரியில் கலக்கிற இடம் வரை 32 தடுப்பணைகளையும், 40 குளங்களையும் வெட்டி இருக்கிறார்கள். அதில் ஒவ்வொரு குளத்துக்கும் தண்ணீர் நிரம்பிய பிறகு மீண்டும் ஆற்றுக்கே தண்ணீரை வரச்செய்து அடுத்த குளத்துக்கு செல்வதற்கேற்ப வாய்க்கால்கள், குளங்களை வெட்டி உள்ளனர்.
இதனால் தான் நொய்யல் ஆற்றுப்பாசனத் திட்டம் சிறப்பான பாசனத்திட்டமாக கருதப்படுகிறது. ‘எங்கே என் பேரூர் பெரிய மகளை காணோமே’ என்று காவிரித்தாய் கூட நொய்யல் ஆற்றில் வெள்ளம் வர காத்திருப்பாள் என்று கொங்கு பகுதிகளில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. இப்படி கொங்கு சோழர்கள் கட்டிய தடுப்பணைகளில் ஒன்றாக இருப்பது தான் 'மங்கலம் நல்லம்மன் தடுப்பணை'.
வெள்ளஞ்செட்டிபாளையத்திற்கு அருகில் உள்ள இந்த தடுப்பணை கட்டும்போது நடுவில் ஒரு இடத்தில் ஆற்று நீரின் வெள்ளப்போக்கால் அணை கட்டுமானம் உடைந்து கொண்டே இருந்ததாகவும், நல்லம்மாள் என்கிற சிறுமியின் உயிர்த்தியாகத்துக்கு பின்னர் இந்த அணை உடைவது முழுவதுமாக நின்று உள்ளது.