தமிழ்நாடு

tamil nadu

கோயில் நில ஆக்கிரமிப்புகளை நான்கு வாரங்களில் அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு

By

Published : Sep 1, 2022, 9:37 PM IST

திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நான்கு வாரங்களில் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC

சென்னை:திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான 550 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அவற்றை மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் ஜெகநாத் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், 2022ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை என்று குற்றம் சாட்டி ஜெகநாத் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான முத்துகுமார் மற்றும் அருண் நடராஜன் ஆகியோர், கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு அரசு கொள்கை முடிவெடுத்துள்ளதாகவும், திருப்போரூர் கந்தசாமி கோயில் மற்றும் ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட 550 ஏக்கரில் 150 ஏக்கர் நிலத்தை மீட்டுள்ளதாகவும், இந்த நிலங்களை பத்திரப் பதிவு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை பின்பற்றுவதாகவும், மீதமுள்ள நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சேர்க்கப்பட்ட தலைமைச் செயலாளர் மற்றும் வருவாய் துறை செயலாளரின் பெயர்களை நீக்கவும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: பெரியார் சிலை விவகாரம்... கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன்..

ABOUT THE AUTHOR

...view details