திருநெல்வேலி: அடைமிதிப்பான் குளம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் தொழிலாளர்கள் 6 பேர் மாட்டிக்கொண்ட நிலையில் நான்கு பேர் இந்த விபத்தில் உயிரிழந்தனர். இரண்டு பேர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டனர். கடைசியாக லாரி ஓட்டுநர் ராஜேந்திரன் என்பவர் நேற்றிரவு (மே 22) சடலமாக மீட்கப்பட்டார்.
இது குறித்து காவல் துறையினர் நடத்திய விசாரணையில் இந்த குவாரியில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குவாரி உரிமையாளர்களான செல்வராஜ் மற்றும் அவரது மகன் உள்பட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த குவாரியில் சுமார் 300 அடி ஆழத்திற்கு பாறைகள் தோண்டப்பட்டதால் விபத்து நடைபெற்றுள்ளது. மேலும், பாறைகள் தோண்டும்போது கடைபிடிக்க வேண்டிய எந்த ஒரு பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்கவில்லை என்பதும் தெரியவந்தது.