சென்னை: 1989ஆம் ஆண்டில் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசியபோது தெரிவித்தார். அவர் பேசிய பின்னர் அந்த சம்பவம் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவரும் திருச்சி எம்பியுமான திருநாவுக்கரசர் செய்தியாளர்களைச் சந்தித்த போது சம்பவம் குறித்து பேசினார்.
அப்போது அவர், “1989ஆம் ஆண்டு சம்பவம் நடந்தது. 35 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் பற்றி பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசியலில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. தமிழிசையும் அரசியலில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை. மூப்பனார் காங்கிரஸ் கட்சித் தலைவர். தமிழிசையின் தந்தை குமரி ஆனந்தன் துணைத் தலைவர்.
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் கருணாநிதி முதலமைச்சர். ஜெயலலிதா பிரதான எதிர்கட்சித் தலைவர். நான் பிரதான எதிர்கட்சியின் துணைத் தலைவர். அப்போது சட்டமன்றத்தில் தற்போது இருப்பதுபோல் ஆளும்கட்சிக்கும், எதிர்கட்சிக்கும் இடையே இடைவெளி இருக்காது.
கருணாநிதி, அன்பழகன் இருக்கைக்கு எதிர் வரிசையில் ஜெயலலிதா அருகில் நான், மூப்பனார், குமரி ஆனந்தன் அமர்ந்து இருந்தோம். ஏதோ அசம்பாவிதம் நடக்கப் போகிறது என்பதை முன் கூட்டியே அறிந்தவர், பட்ஜெட்டை மேஜை மேல் ஒரு சிறிய டேபிள்போல் வைத்து வாசித்தார்.
போயஸ் கார்டனில் ஜெயலலிதா தலைமையில் நடந்த 26 எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பட்ஜெட் வாசிக்க விடாமல் தடுப்பது என முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா ராஜினாமா கடிதம் தொடர்பாக பிரச்னை செய்ய முடிவு எடுக்கப்பட்டது. சட்டமன்றத்தில் கருணாநிதி பட்ஜெட் வாசிக்கும்போது பின்னால் இருந்த ஒரு எம்எல்ஏ பட்ஜெட் புத்தகத்தை இழுத்தார். உடனே, கருணாநிதி சத்தம் போட்டு திரும்பும்போது கண்ணாடி கழுன்று கீழே விழுந்தது. அப்போது அவர் தடுமாறினார்.
உடனே மூத்த அமைச்சர்கள் கருணாநிதியை அழைத்துச் சென்று விட்டனர். பின்னால் இருந்த திமுக எம்எல்ஏக்கள் கருணாநிதி முகத்தில் குத்தி தாக்கி விட்டதாக நினைத்துவிட்டனர். இதனால் பட்ஜெட் புத்தகங்களை வீசினார். நாற்காலி எல்லாம் எடுத்து வீச முடியாது. மைக்கை உடைத்து புத்தகங்களை வீசிக் கொண்டு இருந்தனர்.