"தனி தமிழீழம் தான் தமிழ்நாட்டு மக்களின் இறுதி முடிவு" அதிகார பகிர்வு சட்டம் 13 என்பது தீர்வாகாது- திருமுருகன் காந்தி சென்னை: 'தமிழீழ மக்களுக்கான அரசியல் தீர்வும், தமிழ்நாடு அரசும்' என்பது குறித்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் சனநாயக அமைப்பின் தலைவர்கள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர், "திமுக நாடாளுமன்றக் கூட்டத்தில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இந்த அதிகார பகிர்வு சட்டம் 13-ஐ இலங்கையில் உள்ள தமிழர்கள் ஏற்கவில்லை.
இலங்கை அரசு, சர்வதேச நாடுகளில் நிதி வாங்குவதற்காக அதிகாரப் பகிர்வு என்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு இந்திய ஒன்றிய அரசும் ஆதரவு தெரிவித்துள்ளது. 2013-ல் பொதுவாக்கு எடுப்பு தான் தீர்வு என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவாக திமுக நிலைப்பாடு எடுத்திருப்பது திராவிட கொள்கைக்கு முரணானது.
இந்த அதிகார பகிர்வுச் சட்டம் 13-க்கு பாஜக ஆதரவாக செயல்படுகிறது. 2009ஆம் ஆண்டு ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றுவிட்டு தற்போது அதிகாரப்பகிர்வு தான் தீர்வு என்பதை எப்படி ஏற்பது?. தனி தமிழீழம் தான் தமிழ்நாடு மக்களின் இறுதி முடிவு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் யாரும் இந்த அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை வைத்திருக்கும் திமுக இதற்கு ஆதரவு தெரிவிக்கக்கூடாது என்று கோரிக்கை வைக்கிறோம்.
ஆளும் தரப்பிற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்களை மே பதினேழு இயக்கம் நடத்தியுள்ளது. பாஜகவினர் திட்டமிட்டு ஊடகங்களின் மூலம் எங்களின் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கின்றனர். நாங்கள் முன்னெடுக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கவில்லை" எனக் கூறினார். இதில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், தமிழர் விடுதலைக் கழகத்தின தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: விக்டோரியா கௌரி நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - வைகோ