சென்னை:மே 17 இயக்கம் சார்பில் வரும் 21ஆம் தேதி நடைபெற உள்ள தமிழீழப் படுகொலை நினைவேந்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று(மே.18) நடைபெற்றது.
அப்போது பேசிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, "மே 17 இயக்கம் மக்களுக்கு தேவையானதை எதிரொலித்து வருகிறது. இனப்படுகொலை நடந்து 14 ஆண்டுகள் ஆகியுள்ளது. இப்படி ஒரு துயரமான நாளாக எந்த நாளும் அமைந்தது இல்லை. யூதர் இனப்படுகொலை நடந்து 70 ஆண்டுகள் ஆனாலும், தற்போது வரை அதை நினைவு கூறுகிறார்கள்.
உலகில் எங்கெல்லாம் இனப்படுகொலை நடந்ததோ, அது எல்லாம் இனிமே எங்கேயும் நடக்கக்கூடாது என்பதற்காக நினைவு கூறுகிறார்கள். தமிழின மக்கள் மீது இனப்படுகொலை நடைபெற்றது. இனிமேல் இத்தகைய இனப்படுகொலை நடந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் மே 17 என்ற பெயரில் இந்த இயக்கம் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து சென்னை மெரினா கண்ணகி சிலை அருகே தமிழீழ இனப்படுகொலை நினைவேந்தல் கூட்டத்தை நடத்தி வந்தோம். கடந்த 2017-ல் அந்த இடத்தில் நடத்த முடியாமல் போனது. கடந்த ஆண்டு பெசன்ட் நகர் கடற்கரையில் நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் அரசு அனுமதி மறுத்தது. இந்த ஆண்டு அதற்கான அனுமதி பெற்றுள்ளோம்.