கோயம்புத்தூர்: பெகாசஸ் ஸ்பைவேர் என்ற செயலி மூலமாக ஊடகவியலாளர்கள், முக்கிய பிரமுகர்களின் பேச்சு மற்றும் தரவுகள் வேவு பார்க்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளதாக மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார்.
கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில், இன்று (ஜூலை 19) மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
வேவு பார்க்கும் இஸ்ரேல் செயலி
அப்போது அவர் தெரிவித்ததாவது,"இந்தியாவின் முன்னணி ஊடகவியலாளர்கள், செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், உச்ச நீதிமன்ற நீதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்களின் அலைப்பேசி மற்றும் கணினி தகவல்களை மோடி அரசு வேவு பார்த்துள்ளதாக சர்வதேச ஊடகங்களின் வழியாக தெரிய வந்துள்ளது.
பெகாசஸ் என்ற செயலியின் மூலமாக வேவு பார்க்கப்பட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. இந்த செயலி இஸ்ரேல் நிறுவனத்தினுடையது. இதன் வழியாக அலைப்பேசி மற்றும் கணினிகளை உளவு பார்த்திருக்கிறார்கள். இதனை அம்பலப்படுத்திய செய்தியாளர்களின் அலைபேசி மற்றும் கணினிகளும் உளவு பார்க்கப்பட்டுள்ளன.
பீமா கோரேகான் வழக்கு
மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்த செயலியின் வழியாக ரோனா வில்சன் என்ற சமூக செயல்பாட்டாளர் கணிப்பொறியில் பொய்யான தகவல்களை மோடி அரசு பதிவு செய்தது. அந்த பொய்யான தகவல்களை அடிப்படையாக வைத்து, அவர் குற்றம் செய்ததாகக் கூறி அவர் உள்பட 10 பேரை பீமா கோரேகான் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தது.
தற்போது தமிழ்நாட்டில் என்னுடைய அலைப்பேசியையும் உளவு பார்த்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதற்கான காரணம் என்ன என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்கிறோம். மக்களுக்காக போராடுபவர்களை உளவு பார்க்கும் வேலையை ஒன்றிய அரசு செய்கிறது. நேர்மையற்ற செயல் திட்டத்தை ஒன்றிய அரசு செய்து வருகிறது. அந்த செயலிமூலம் தவறான தகவல்களைப் ஒருவரின் கணினியில் பதிவு செய்து, அவரைச் சிறையில் அடைத்து விட முடியும். பெகாசஸ் செயலியை இந்திய அரசுக்கு இஸ்ரேல் தந்துள்ளது.
பெகாசஸ் ஸ்பைவேர் செயலி மூலம் மோடி அரசு வேவு பார்க்கிறது ஊடகவியலார்களுக்கு அச்சுறுத்தல்
கடந்த 7 ஆண்டுகளாக பிரதமர் ஊடகங்களை சந்திக்கவில்லை. ஆனால் தற்போது ஊடகங்களுக்கு நெருக்கடி கொடுக்கப்படுகிறது. பத்திரிக்கையாளர் சுதந்திரம், பாதுகாப்பு மோசமாக இருக்கும் நாடுகளின வரிசையில் 142ஆவது இடத்தில் இந்தியா இருக்கிறது. பத்திரிக்கைச் சுதந்திரம் மோசமாக உள்ள நாடுகள் இந்த செயலியை பயன்படுத்துகிறன. இந்திய அரசும் தற்போது இதனை பயன்படுத்துகிறது.
பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை ஆறு மாத காலத்திற்குள் ஊடகங்களை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவோம் என கூறியிருக்கிறார். ஆனால் இந்தச் செயலியைப் பயன்படுத்தி 6 மாதங்களுக்கு முன்பாகவே ஊடகங்களை கட்டுக்குள் கொண்டு வரும் செயல்களை அவர்கள் செய்து வருகின்றனர்.
நெருக்கடி நிலையை அறிவித்துவிட்டு இதனைச் செய்திருந்தால் ஒன்றுமில்லை. ஆனால் எதையும் கூறாமல் இந்த நடைமுறையை செயல்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நீதிமன்றத்தை நாட இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேசிய கடல் மீன்வள மசோதா: அமைச்சர் எல். முருகன் மீனவர்களை அழைத்துப் பேச வலியுறுத்தல்