தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'போர்க்குற்றவாளியை இந்தியாவுக்குள் அனுமதிக்காதே' - விசிக நாளை ஆர்ப்பாட்டம் - ஐநா மனித உரிமை ஆணையம்

சென்னை: போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள மத்திய அரசு அதனை திரும்பப் பெறவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Thirumavalavan

By

Published : Nov 22, 2019, 1:21 PM IST

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் பேரினவாத வெறியின் அடிப்படையில் கோத்தபய ராஜபக்ச வெற்றி பெற்றுள்ளார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு முதன்மையான காரணம் அன்றைய ராணுவ ஆலோசகராக இருந்த கோத்தபய ராஜபக்சதான். பல்லாயிரக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்த போர்க்குற்றவாளி என அவர் மக்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் செய்த போர்க்குற்றங்களை விசாரிப்பதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் தீர்மானம் நிறைவேற்றியதை அன்றைய இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

கோத்தபய மற்றும் மஹிந்த ராஜபக்ச உடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஒப்பந்தத்தை நிறைவேற்ற மாட்டேன் என்று தேர்தல் பரப்புரையில் கோத்தபய தெரிவித்திருந்தார். இன்று அவர் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருப்பதால் ஐநா தீர்மானத்தின் அடிப்படையில் போர்க்குற்ற விசாரணை நடத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில், அவசர அவசரமாக இந்திய அரசு கோத்தபயவுக்கு இந்தியா வர அழைப்பு விடுத்துள்ளது.

ராஜபக்ச சகோதரர்கள் - பிரதமர் நரேந்திர மோடி உடன் மஹிந்த ராஜபக்ச

இது ஈழத்தமிழர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழர்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஐநா தீர்மானத்திற்கு எதிரான இந்திய அரசின் இந்த நடவடிக்கை ஏற்கத்தக்கது அல்ல. கோத்தபய ஆட்சியில் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பது வெளிப்படை. ஈழத்தமிழர்களுக்கு எப்போதுமே அரணாக இருக்கின்ற இந்திய அரசு தனது நிலைபாட்டை மாற்றி சிங்கள பேரினவாதத்துக்கு துணைபோவது ஒட்டுமொத்த தமிழர்களையும் வருத்தம் அடையச் செய்துள்ளது.

தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபய ராஜபக்சவுக்கு விடுத்துள்ள அழைப்பை மத்திய அரசு திரும்பப்பெறவேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் அனைவரும் திரளாக பங்கேற்று, கோத்தபயவுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை ரத்து செய்ய வலியுறுத்த வேண்டும்' என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க...

மீண்டும் இலங்கை பிரதமரானார் ராஜபக்ச !

ABOUT THE AUTHOR

...view details