சென்னை:பேராசிரியர் ஜெகதீசன் எழுதிய ’வாழும் வரைக்கும் வள்ளுவம்’ நூல் வெளியீட்டு விழா சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி நூலை வெளியிட விசிக தலைவர் தொல். திருமாவளவன் பெற்றுக் கொண்டார். அதன்பின் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “வள்ளுவம் தமிழினத்திற்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே பொதுவானது. அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது. மனிதகுலம் வாழும் வரை வள்ளும் வாழும், காலத்தால் வழிபடும் மதத்தை கூட மாற்றிக்கொள்வோம், ஆனால் வள்ளுவத்தை மாற்ற முடியாது.
பெரியாருக்கு சில பேர் பூனூல் போட்டு பார்க்கிறார்கள், சில பேர் காவி உடுத்திப் பார்க்கிறார்கள். பெரியார் காவியை விரும்பி இருந்தால் சங்கராச்சாரியார்களுக்கு இடம் இருந்திருக்காது. தீவிர ஆன்மிக குடும்ப பின்னணியில் பிறந்து, சாதி, மதம் இல்லை என்று சொன்னவர் பெரியார். உழைக்கும் மக்களின் குரலாக மாறி, அவர்களின் விடுதலைக்கு போராடியவர் பெரியார்.
ஈரோட்டில் பிறந்த வள்ளுவர் தந்தை பெரியார். வள்ளுவமும், பெரியாரின் கொள்கைகளும் ஒன்று தான். பெரியார் பிறந்த இந்த மண்ணில் ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை நாம் அனுமதிக்கலாமா? மதத்தின் பெயரால் தமிழ்நாட்டை வன்முறை காடாக மாற்றிட வித்திடுகிறார்களே அதை நாம் அனுமதிக்க போகிறோமா?
ஆர்எஸ்எஸ் பேரணி மூலம் சமூகநீதியை பாதுகாக்க போகிறார்களா? ’ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது மட்டும்தான் அவர்களின் நோக்கம். புதுச்சேரியில் மூன்று அமைச்சர்கள் அரைக்கால் சட்டை போட்டு ஆர்எஸ்எஸ் பேரணியில் கலந்து கொள்வது எவ்வளவு வெட்க கேடானது.
ஆர்எஸ்எஸ் சராசரி ஜனநாயக இயக்கம் இல்லை, அவர்கள் பாசிச இயக்கம். மக்களின் அத்திவாசிய பிரச்சனைக்காக ஆர்எஸ்எஸ் பேரணி நடத்தவில்லை, மதவாத கருத்துகளை இளைஞர்களிடம் புகுத்தி பிரிவினைவாதத்தை ஏற்படுத்த தான் இந்த பேரணியை நடத்த துடிக்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பினருக்கு 18 இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்பு உள்ளது. தீவிரவாத அமைப்பு தொடர்பு உள்ளது என ’பாப்புலர் பிராண்ட் அப் இந்தியா’ என்ற அமைப்பை தடை செய்த ஒன்றிய அரசு, 18 குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு தொடர்புடைய ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தடை செய்யவில்லை.
இதுபோன்ற பேரணிக்கு நாம் ஆதரித்தால் அடுத்த 10 ஆண்டுக்கு பிறகு நாம் கருப்பு, நீலம், சிவப்பு சட்டை அணிய முடியாது. மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறோம். தமிழ்நாடு கருத்தால் முற்போக்கானது. 11ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டத்தில் நாம் காட்டுகிற ஒற்றுமையை பார்த்து அவன் வாலை சுருட்டிக் கொண்டு ஓட வேண்டும்.