இணையவழி கருத்தரங்கம் ஒன்றில் பேசிய திருமாவளவன், மனுஸ்மிருதி எனப்படும் மனுதர்மம் பெண்களை எப்படி இழிவுப்படுத்துகிறது; இந்து பெண்களை இழிவாக சொல்கிறது எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார்.
இந்தப் பேச்சின் ஒரு பகுதி மட்டும் வைரலான நிலையில், இந்து பெண்களை இழிவாக திருமாவளவன் கூறியதாகக் கூறி, பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனைக் கண்டித்து விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்தார். இந்நிலையில், விசிக சார்பில் மனுதர்ம நூலில் பெண்கள் பற்றி கூறியுள்ளதை விளக்குவதற்காக நேற்று(நவ.03) முதல் நவம்பர் 5ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் கருத்து பரப்பி, துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகின்றனர்.
சென்னை ஆவடியில் தமிழ் சைவப் பேரவை இயக்கத் தலைவர் கலையரசி நடராஜனிடம் முதல் துண்டு பிரசுரத்தை கொடுத்து தொடங்கி வைத்த திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அதிமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிவார்கள். வன்முறையைத் தூண்டுவதற்கு பாஜகவினரின் வேல் யாத்திரை வழிவகுக்கும்.
'பாஜகவிற்கு துணைபோகும் அதிமுக' நான், கூறிய கருத்துக்கு என்னை எதிர்க்காமல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட திமுக கூட்டணியை குறி வைத்துப் பேசி வருகின்றனர். என்ன சூழ்ச்சி செய்தாலும் திமுக ஆட்சிக்கு வருவதை யாரும் தடுக்க முடியாது. மற்ற மாநிலங்களில் பாஜக சூழ்ச்சி வெல்லலாம். தமிழ்நாட்டில் பாஜகவின் ஜம்பம் பலிக்காது. கமல்ஹாசன் கழகங்களுடன் கூட்டணி இல்லை என்ற கருத்தை வரவேற்கிறேன்" என்றார்.
இதையும் படிங்க:வயலின் இசைக் கலைஞர் டி.என்.கிருஷ்ணன் மறைவிற்கு முதலமைச்சர் இரங்கல்