பட்டியலின, பழங்குடியின மக்களுக்களின் உரிமைகளுக்கான சட்டங்களைத் தானே முன்னெடுத்து செயல்முறைப்படுத்திய முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் பி.எஸ். கிருஷ்ணன், கடந்த 10ஆம் தேதி மறைந்தார். அவரது நினைவேந்தல் நிகழ்வு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் தமிழ்நாடு மழைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில், மறைந்த கிருஷ்ணனின் உருவப்படத்தை மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
பின்னர் பேசிய கே. பாலகிருஷ்ணன், ”தனது 51ஆவது வயதில் ஐஏஎஸ் அலுவலராக ஆனதிலிருந்து மறைவு வரை பழங்குடியின, பட்டியலின மக்களின் சமூக முன்னேற்றத்திற்காகப் போராடியவர் கிருஷ்ணன். அவரது வாழ்நாளில் எந்த சூழ்நிலையிலும் பட்டியலின மக்களின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டிருந்தார்.
அம்மக்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், சாதிய அடக்குமுறையை வேரறுக்கவும் ஏராளமான யோசனைகளை கூறியதோடு மட்டுமல்லாமல், அதற்கானப் போராட்டங்களையும் முன்னெடுத்தவர் கிருஷ்ணன். அவரது சிந்தனைகள் இன்று இல்லாவிட்டாலும், என்றாவது ஒருநாள் அது சாத்தியப்படும். அதனைச் சாத்தியப்படுத்த வேண்டுமென்பதே நாம் அவருக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்” என்றார்.
பின்னர் பேசிய திருமாவளவன் எம்.பி, ”கிருஷ்ணன் மிக உயர்ந்த சாதி என்று சொல்லிக்கொள்ளும் பிராமண சமூகத்தில் பிறந்தவர். ஆயினும் மனிதர்களுக்கிடையே இருந்த சாதியப் பிரிவினைகள், தீண்டாமைகள் ஆகியவற்றிற்கு எதிராகவும், அந்தக் கொடுமைகளிலிருந்து அவர்களை மீட்கவும் தன் வாழ்நாளை அவர் அர்ப்பணித்தவர். அவரின் முயற்சிகளினால் வந்ததுதான் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இன்னபிற பட்டியலின மக்கள் பாதுகாப்புச் சட்டங்கள். இப்படி ஒருவர் இருந்திருப்பாரா என்று இனி வரும் சந்ததிகள் சிந்திக்க முடியாத மாமனிதர் கிருஷ்ணன்.
நிகழ்வில் பேசிய திருமாவளவன் நில எடுப்புச் சட்டத்தின் உயர் அலுவலராக நியமிக்கப்பட்டதிலிருந்து, அவரின் இறுதி வாழ்வு வரை பட்டியலின மக்களின் மேம்பாட்டிற்காகவே அவரது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார். இதனால் அவர் தன் உயர் அலுவலர்கள் தொடங்கி அரசியல்வாதிகள் வரை பலரின் உக்கிரமான எதிர்ப்புகளை சம்பாதித்திருந்தாலும், தன் கொள்கையிலிருந்து அவர் ஒருபோதும் பின்வாங்கியதில்லை. கிருஷ்ணனின் மறைவு பழங்குடியின, பட்டியலின மக்களுக்கு பேரிழப்பாகும்” என்றார்.
இதையும் படிங்க:இந்து கோவில் பற்றி சர்ச்சைப் பேச்சு: திருமாவளவன் மீது காவல் நிலையத்தில் புகார்!