உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நிர்வாக நீதிபதியாக இருந்த பி.என். பிரகாஷ் சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்குப் பதிலாக நீதிபதி சத்தியநாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”சாத்தான்குளம் கொடூரத்தைச் சகித்துக்கொள்ள இயலாத நேர்மைத்திறன் கொண்ட துணிச்சல்மிக்கவர் நீதியரசர் பி.என். பிரகாஷ். அவரது நேர்மையும், துணிவும் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியாக மாறியது. அதனால்தான் தற்போது அவரது பணியிடம் மாறியது. இது அச்சுறுத்தும் அரசியல்?” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது ட்விட்டர் பதிவில், ”பல்வேறு மாவட்டங்களில் ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் (FOP) அமைப்பு காவல் துறையினருடன் இணைந்து செயல்பட தடைவிதிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதனால், காவல் நண்பர்கள் என்ற பெயரில் சாதியவாதிகளும், மதவாதிகளும் காவல் துறையில் ஊடுருவும் தீங்கு தடுக்கப்படும். உத்தரப்பிரதேசத்தைப் போல தமிழ்நாடு மாறாமல் பாதுகாக்கப்படும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
நீதிபதி பணி மாறுதல் தொடர்பாக, உயர் நீதிமன்ற வட்டாரங்களில் கேட்டபோது, ”நீதிபதிகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சென்னை உயர் நீதிமன்றத்திற்கும், மதுரை உயர் நீதிமன்றத்திற்கும் மாற்றும் நிகழ்வு வழக்கமானதுதான். அந்த அடிப்படையில் மூன்று மாதங்கள் கடந்துவிட்டதால் நீதிபதி பி.என். பிரகாஷ் மாற்றப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டது.
இதையும் படிங்க: ஸ்மார்ட் சிட்டி திட்டங்களில் முறைகேடு: சிபிஐ விசாரணை கோரும் திமுக!