சென்னை:இன்றைக்கு காவியை விரட்ட, திராவிட தமிழக அரசியலைப் பேணவும், எதிரிகளை அழிக்கவும் பாவலரேறு பெருஞ்சித்திரனார் தேவைப்படுகிறார் என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார். அடையாரில் உள்ள 'முத்தமிழறிஞர் பேரவை'-யில் தமிழ்தேசிய தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (ஜூன் 11) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், விசிக தலைவர் திருமாவளவன், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா (A.Raja), திமுக சட்ட மன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, திராவிடர் கழக பரப்புரை செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் (Pavalareru perunchithiranar) திருவுருவப்படத்தை திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா திறந்து வைத்த அவரின் திருவுருவ சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, “திராவிட இயக்க தலைவர்கள் போற்றிய தனிப்பெரும் அறிஞரை போற்றுவதற்கு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேடையில் பேசிய அனைவரும் அவரின் புகழையும் ஆளுமையும் பேசினார்கள். ஆனால்க் அவரிடம் இருந்து அரசியலை யாரும் பேசவில்லை என வருத்தம் தெரிவித்தார்.
பாரதிதாசனை தமிழோடு மட்டும் அடையாளப்படுத்தி இருந்தால், புரட்சி கவிஞர் கிடைத்திருக்க மாட்டார் என்ற அவர், பாவலரின் தனித்தமிழ் இயக்கம் தொன்மையானது என்றார். இது தமிழிடமிருந்து பிற மொழியை பிரித்து எடுத்து தனி தமிழில் முதன்மைப்படுத்துவதற்கான கொண்டுவரப்பட்ட இயக்கம் என்றும் இவ்வாறு வார்த்தைக்கு வாழ்க்கைக்கும் இடைவெளி இல்லாமல் வாழ்ந்தவர் தான் பாவலரேறு பெருஞ்சித்திரனார் என்றும் புகழாரம் சூடினார். திராவிட இயக்கமும் தனித்தமிழ் இயக்கமும் தனித்தனியாக இயங்கினாலும் அதன் தனித்து கொண்ட புள்ளியில் பாவலரேறு பெருஞ்சித்திரனார் உயர்ந்துள்ளதாக அவர் புகழ்ந்தார்.
தமிழுக்கு ரூ.10 கோடி மட்டுமே ஒதுக்கீடு: மொழியை காப்பாற்ற வேண்டும் என்று பெருஞ்சித்திரனார் விரும்பியதாகவும், இன்று மத்திய அரசு மொழிக்கு ஒதுக்கீடு செய்த 300 கோடி தொகையில் வெறும் பத்து கோடி தான் தமிழுக்கு ஒதுக்கீடு செய்ததாக குற்றம்சாட்டினார். இன்றைக்கு காவியை விரட்ட, திராவிட தமிழக அரசியலை பேணுவும் எதிரிகளை அழிக்கவும் பெருஞ்சித்திரனார் தேவைப்படுகிறார்” என்று அவர் தெரிவித்தார்.