குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் அதனை ரத்து செய்ய வலியுறுத்தியும் போரூர், மதுரவாயல் சுற்றுவட்டார இஸ்லாமிய அமைப்புகள், திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் போரூர் ரவுண்டானா அருகே நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பூந்தமல்லி, போருர், மதுரவாயல், மாங்காடு, குன்றத்தூர், அய்யப்பன்தாங்கல், காட்டுப்பாக்கம், பட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் தேசிய கொடிகளுடன் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் முழக்கங்களை எழுப்பினர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆங்கில புத்தாண்டு, தமிழர் திருநாள் கொண்டாட்டம் வேண்டாம் என அறிக்கை விடுத்தேன். இதனால் நமது போராட்டம் திசை திரும்பிவிடக்கூடாது என்பதற்காக, இந்தப் போராட்டம் இரண்டாவது விடுதலை போராட்டத்திற்கு நிகரானது எனவேதான் அதனை சொன்னேன்.
இந்தப் போராட்டம் இந்தியா முழுவதும் தொடர்ச்சியாக நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த நிலைக்கு மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கானது என்று எண்ணிவிடக்கூடாது. அனைத்து மதத்தவரும் தொடர்ந்து இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள் வேண்டும்.
பிப்ரவரி 15ஆம் தேதி தேசம் காப்போம் என்ற பேரணியை திருச்சியில் நடத்த முடிவு செய்துள்ளோம். இது ஆபத்தான சட்டம், இந்த சட்டம் குறித்து மோடியும் அமித்ஷாவும் மாறி மாறி கருத்துகளைக் கூறி மக்களை குழப்பி வருகின்றனர். அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட இந்த சட்டத்தை முழுமையாக திரும்பப் பெற வேண்டும், அதுதான் நமது கோரிக்கை” என தெரிவித்தார்.