மருத்துவப் படிப்பில் ஏற்கனவே இருந்த இடஒதுக்கீட்டை மாற்றியமைத்தது மத்திய அரசு. இதற்கு கடும் எதிர்ப்புகள் எழத் தொடங்கின. குறிப்பாக, தமிழ்நாட்டில் திமுக, விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராகக் கண்டனங்களைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடந்தன.
இந்த வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம் மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இடதுக்கீடு தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உத்தரவிட்டது. இதனைத் தொடந்து இவ்வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பில், "மருத்துவப் படிப்பில் அகில இந்திய இடஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு சட்டம் இயற்ற வேண்டும். இடஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிற இந்திய மருத்துவ கவுன்சிலின் வாதம் ஏற்புடையதல்ல. அகில இந்திய ஒதுக்கீட்டில் மாநில கல்வி நிறுவனங்களில் ஓபிசி இடஒதுக்கீட்டிற்கு அரசியலமைப்பு ரிதியாக எந்தத் தடையும் இல்லை. மாநில கல்வி நிறுவனங்களில் ஓபிசிக்கு இடஒதுக்கீடு தரக் கூடாது என மருத்துவ கவுன்சிலில் எந்த விதிகளும் இல்லை" எனக் கூறியுள்ளது.