தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மருத்துவப் படிப்புகளில் இடஒதுக்கீடு விவகாரம்: திருமாவளவன் கண்டனம் - Thirumavalavan MP

சென்னை: மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு இல்லாதது சமூகநீதிக்கு எதிரானது என கண்டனம் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திருமாவளவன் ஹர்ஷ் வர்தன்
திருமாவளவன் ஹர்ஷ் வர்தன்

By

Published : May 27, 2020, 3:50 PM IST

மருத்துவக் கல்விக்கான மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்காமல், மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் நிரப்பப்பட்டுவரும் போக்கைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”எம்பிபிஎஸ், பிடிஎஸ், முதுநிலை மருத்துவப் படிப்புகள் உள்ளிட்டவற்றில் மத்திய தொகுப்புக்கு ஒதுக்கீடு செய்யப்படும் இடங்களில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது. இந்த கல்வியாண்டில் அம்மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

2019ஆம் ஆண்டு ஜூன் மாதம், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் அளித்து வலியுறுத்தினோம். இதுகுறித்து இந்த ஆண்டாவது நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துகிறோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவனின் கடிதம்

இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், இன்ன பிற முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு இருக்கும் இடங்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தை மத்திய தொகுப்புக்கு ஒவ்வொரு கல்லூரியும் அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அவ்வாறு அளிக்கப்படும் மத்திய தொகுப்பு இடங்கள் மொத்தம் 40,842 ஆகும். இதில் 27 சதவிகித இட ஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோருக்கு அளிக்கப்பட்டால் ஆண்டொன்றுக்கு 11,027 இடங்கள் அவர்களுக்கு கிடைக்கும்.

ஆனால் இட ஒதுக்கீடு மறுக்கப்படும் காரணத்தால் அவர்களுக்கு ஒரு இடம் கூட இதுவரை கிடைக்கவில்லை. இந்த அநீதியை கடந்த 2019ஆம் ஆண்டே விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அம்பலப்படுத்தியது. நாடாளுமன்றம் கூடியதுமே மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தனை சந்தித்து பிற்படுத்தப்பட்டோருக்கு உடனடியாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை

ஆனால் அதுகுறித்து இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு இல்லை என்று சொல்லும் மத்திய அரசு, சமூகத் தகுதியால் முன்னேறிய வகுப்பினருக்கு மட்டும் 10 சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்குகிறது. இது சமூகநீதிக்கு சாவுமணி அடிப்பதாகும்.

மத்திய தொகுப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டிலிருந்து 490 எம்பிபிஎஸ் இடங்களும், 879 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்களும் கொடுக்கப்படுகின்றன. அவற்றில் 27 சதவிகிதம் கணக்கிட்டால் பிற்படுத்தப்பட்டோருக்கு 369 இடங்கள் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. இதனை இனியும் தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கப் போகிறதா?

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய தொகுப்பில் இட ஒதுக்கீடு வழங்கிட மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசுகளும் இதற்குரிய அழுத்தத்தை அளிக்கவேண்டும். சமூகநீதியைக் காக்கும் வகையில் இக்கோரிக்கையை வலியுறுத்தி, விரைவில் களமிறங்குவோம் என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:சர்ச்சையான திருமாவளவன் குறித்த கேலி சித்திரம்: கார்டூனிஸ்ட் வர்மா கைது!

ABOUT THE AUTHOR

...view details