சென்னை: தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகை, 10 ஆவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் "மாநில அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம்" (State Level Vigilance and Monitoring) நடைபெற்றது. இதில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அனைவரும் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை கூறியதாவது, “இன்று நடந்த ஆதிதிராவிடர் பழங்குடியின நலத்துறை கண்காணிப்பு குழு கூட்டத்தில் முதலமைச்சர், கடந்த கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டது என எடுத்துரைத்தார். பின்னர் இளைய பெருமாள் நூற்றாண்டு விழா எடுக்க வேண்டும் என காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி உள்ளோம்.
வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை கட்டுபடுத்த வேண்டும். அதற்கு ஒரு குழு அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம். மேலும் காங்கிரஸ் சார்பில் ஆதி திராவிடர் பள்ளிகளை பள்ளிக்கல்வி துறையுடன் இணைப்பதில் சிலருக்கு ஐயப்பாடுகள் உள்ளது என தெரிவித்துள்ளோம். ஆகையால் அதை தெளிவுபடுத்த வேண்டும். ஜோதி பாபு, நாராயண குரு போன்ற சமூக நீதிக்கான தலைவர்களின் புத்தகங்களை தமிழாக்கம் செய்ய வேண்டும். அவர்களை பற்றி தமிழ்நாட்டில் தெரியப்படுத்த வேண்டும்" என்ற கோரிக்கையும் வைத்துள்ளதாக செல்வபெருந்தகை கூறினார்.