சென்னை:நெல்லை மாவட்டம் மணிமுத்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் சம்பவத்தில், குற்றவாளிகளைப் பிணையில் வெளிவிடாமல் வழக்கை விரைந்து விசாரித்து உரிய தண்டனை கிடைத்திட காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரம் வாழவந்த அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் மனோஜ்குமார் (21). இவரது உறவினர் சேகர் மகன் மாரியப்பன்(19) இருவரும் கடந்த 30ம் தேதி இரவு இருவரும் மணிமூர்த்தீஸ்வரத்தில் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அப்போது, அப்பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்த சிலர் இருவரையும் வழிமறித்து, கொடூரமாகத் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களின் சாதி பெயரை செல்லியும் தாக்கியுள்ளனர். மேலும், அவர்களை நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்து அவர்களிடமிருந்த 2 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தைப் பறித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிந்த இளைஞர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடனடியாக படுகாயமடைந்த இரண்டு பேரையும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், " நெல்லை மாவட்டம் மணிமுத்தீசுவரம் பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் இருவர் சாதிவெறிக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் மீது சிறுநீர் கழித்து இழிவுப்படுத்தியுள்ளனர். இந்த அநாகரிகத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.