சென்னை: விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்த பட்டியலின மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாது என மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரம் மீண்டும் சாதிய பாகுபாடா என்று பேசப்பட்ட நிலையில், மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய் கோட்டாசியர் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், இதனை கண்டிக்கும் விதமாகவும், இந்து சமய அறநிலையத்துறை கோயில்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமை தர வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தி சென்னை வள்ளுவர் கோட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திராவிடர் கழகம் உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய திருமாவளவன், "விழுப்புரம் மாவட்டம் மேல்பாதியில் சாதி வெறி தூண்டிவிடப்படுகிறது. கோயில்களில் அனைவருக்கும் வழிபாட்டு உரிமையை வழங்க வேண்டும். கொள்கை சார்ந்து சிந்திக்க வேண்டும். கொள்கை சார்ந்து சிந்தித்தால் அமித்ஷா விசிகவில் இணைந்து விடுவார். வன்னியர்களுக்கு யார் எதிரி? விசிகவா அல்லது பாஜகவா என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்துக்கள் என்ற போர்வையை சாதி அரசியலுக்காக பாஜக பயன்படுத்துகிறது. காவல் துறையினரிடையே தலித் விரோதப் போக்கு நிலவுகிறது. தாழ்த்தப்பட்டவர்கள் உரிமையை கோரும்போதுதான் சாதி பார்க்கப்படுகிறது. மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் தலித் மக்களையும் வழிபட அனுமதிக்க வேண்டும். தலித் மக்களுக்கு உடனடியாக பயன் அளிக்காது என்றாலும், திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல் வைத்த அதிகாரிகளின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.