சென்னை: தமிழ்நாட்டில் தற்போது நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து புகார் ஒன்றை அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், 'காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபுவை சந்தித்து தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டேன். குறிப்பாக தொடர்ந்து பாஜகவினர் வன்முறைகளைத் தூண்டும் வகையில் பேசி வருகின்றனர்.
அண்மையில் சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பாஜக தலைவர் பேசியது வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளது. ராணுவ வீரர் குண்டுவீசுவோம், துப்பாக்கியால் சுடுவோம் என பேசியதை பாஜக தலைவர் அண்ணாமலை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுகிறார். அதன் மூலம் பதற்றத்தை உருவாக்கி ஆதாயம் தேட பாஜக நினைக்கிறது.
வடமாநிலங்களில் பின்பற்றக்கூடிய அதே யுக்திகளை பாஜக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர். அண்மையில் தி.க. தலைவர் வீரமணியின் காரை வழிமறித்து இந்து முன்னணி அமைப்பினர் வன்முறை செய்ய முயற்சி செய்துள்ளனர். இப்படி நாடெங்கும் பதற்றத்தை ஏற்படுத்த நினைக்கும் செயலை டிஜிபியின் பார்வைக்கு கொண்டு சென்றேன்' என அவர் தெரிவித்தார்.