தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவரா? - தொல்.திருமாவளவன் என்ன சொன்னார் தெரியுமா? - சென்னை மாவட்ட செய்திகள்

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர் என நூலாசிரியர் தெய்வநாயகம் பேசிய கருத்திற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவரா?
திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவரா?

By

Published : Nov 5, 2021, 9:12 PM IST

சென்னை: 'திருக்குறள் பற்றிய புரட்சி நூல்' எனும் தலைப்பில் பேராசிரியர் தெய்வநாயகம் எழுதிய நூல் வெளியீட்டு விழா கீழ்ப்பாக்கத்தில் உள்ள இஎஸ்ஐ இறையியல் கல்லூரியில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நூலை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், "வள்ளுவரை ஒவ்வொரு சமயத்தவரும் உரிமை கோருகிறார்கள். அண்மைக்காலத்து புள்ளி விவரம் கூறுகிறது மதமும் கடவுளும் வேண்டாம் என, வாழும் மனிதர்களின் எண்ணிக்கை பெருகிவருவதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது.

சைவமும் வைணமும் ஆரிய மதம் அல்ல. இந்தியாவில் உள்ள 108 வைணவ கோயில்களில் 106 தமிழ்நாட்டில் தான் உள்ளது. பெரும்பாலான சைவக்கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது.

63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் தமிழர்கள், ஆதிசங்கரர், இராமானுஜர், மத்வர், ஆகியோர் தத்துவங்களை மட்டுமே சொல்லி இருக்கிறார்கள். மதங்களை உருவாக்கவில்லை.

சமூக நீதியை வென்றெடுக்க முடியாது

தமிழர்கள் எனும் திராவிடர்கள் சமயம் தான் சைவ, வைணவ சமயங்கள், நம்மதங்களின் மீதான ஆரிய ஆக்கிரமிப்புகளிலிருந்து நாம் விடுபட வேண்டும்.

கிறிஸ்தவத்துக்கும் இஸ்லாத்துக்கும் எதிரான மத வெறுப்பு பரப்புரை தற்போது நடைபெற்று வருகிறது. சனாதனத்தை எதிர்க்காமல் சமூக நீதியை வென்றெடுக்க முடியாது. அதற்கு திருக்குறளும் ஆயுதமாக இருக்கிறது. கிறிஸ்தவர்கள் பைபிளை மட்டும் கையிலேந்தாமல், திருக்குறளையும் படிக்க இந்த நூல் உந்து சக்தியாக திகழும்" என்றார்.

வழக்கறிஞர்கள் கைது கண்டனத்துக்கு உரியது

பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய திருமாவளவன், "கடந்த சில வாரங்களாக திரிபுராவில் மிக மோசமான வன்முறையை இஸ்லாமியர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விட்டுள்ளது பாஜக அரசு. இதை விசிக வன்மையாக கண்டிக்கிறது.

உபா சட்டத்தின் கீழ் வழக்கறிஞர்கள், மௌலவிகள் கைது செய்யப்பட்டிருப்பது கண்டனத்துக்கு உரியது. எந்த மாநில அரசும் செய்வதற்கு முன்னதாக, ஏற்கெனவே முந்திக்கொண்டு டீசல் விலையை தமிழ்நாடு அரசு குறைத்தது. அதேபோல் பெட்ரோல் விலையையும் குறைப்பார்கள் என நம்புகிறோம்.

பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும்

திருவள்ளுவர் ஞானஸ்நானம் பெற்றவர், அவர் ஒரு கிறிஸ்தவராக இருந்து தான், திருக்குறள் நூலை எழுதி உள்ளார் என நூலாசிரியர் தெய்வநாயகத்தின் கருத்து ஆய்வுக்கு உரியது.

பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என்பது தான் நீண்ட நாள் கோரிக்கை. அவர்கள் அரசின் நலத்திட்டங்களை பெற முடியாத நிலையில் உள்ளனர்.

குறிப்பாக சாதிச் சான்றிதழ், இதர அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை தமிழ்நாடு அரசு செய்து தர வேண்டும்.

தமிழ்நாட்டில் குற்ற நடவடிக்கைகளில் குறவர்களைக் கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. எனவே, அவர்கள் உரிய புலனாய்வு இல்லாமல் அந்த மக்களை கைது செய்வதைத் தவிர்க்க, உரிய செயல்திட்டத்தை முதலமைச்சர் உருவாக்க வேண்டும்.

பூஞ்சேரி கிராமத்தில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் குதர்க்கமாக கருத்தில் கொள்ள வேண்டியவை அல்ல.
பழங்குடியினருக்கு, பட்டியலின மக்களுக்கு பட்டா வழங்குவது அரசின் செயல்திட்டங்களில் ஒன்று" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:யாத்தே...'அண்ணாத்த' முதல்நாள் வசூல் இவ்வளவா..?

ABOUT THE AUTHOR

...view details