இன்று சென்னை விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு பேட்டியளித்தபோதே அவர் இதனைக் கூறினார். இது குறித்து அவர் கூறியதாவது:
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலையை உடைத்து அவர்களை அவமதிப்பது போன்ற செயல்கள் தமிழ்நாட்டில் அதிகரித்துவருகிறது. இது தமிழ்நாடு அரசின் வலிமையை சோதிக்கும் செயலாக அமைந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவதற்கும் அதிகரிப்பதற்கும் அரசின் மெத்தனப்போக்கே காரணம்.
செங்கல்பட்டு மாவட்டம் கலியப்பேட்டையில் பெரியார் சிலை உடைத்ததில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் பாமக நிர்வாகி எனத் தெரிகிறது. பெரியார், அம்பேத்கர் போன்றவர்களின் சிலையை அவமதிக்கின்ற சாதிய, மதவாத சக்திகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேசியத் தலைவர்கள் அவமதிக்கப்படுவது அரசின் பலவீனத்தைக் காட்டும். எனவே, தேசியத் தலைவர்கள் மீதான அவமதிப்புகளைத் தடுக்க இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களைக் கைதுசெய்ய தனி உளவுப்பிரிவு ஒன்றை தமிழ்நாடு காவல் துறையினர் உருவாக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் மெத்தனப் போக்கே காரணம் - திருமாவளவன் குற்றச்சாட்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மாநிலங்களவையில் வாக்களித்து பாரதிய ஜனதா கட்சிக்கு ஒத்துழைத்த அதிமுகவும், பாமகவும் இதுபோன்ற விஷமத்தனமான நடவடிக்கைகளை ஊக்கப்படுத்திவருவதாகத் தெரிகிறது.
பெரியார் சிலை உடைப்பு பாமக நிர்வாகி கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் பாமக எந்த திசையில் பயணித்துக் கொண்டிருக்கிறது? எதிர்காலத்தில் அக்கட்சி என்னவாகும்? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.
பெரியார் பெயரில் கோட்பாடுகளை வகுத்து இயக்கம் நடத்தி வருகிற பாமக இன்று பெரியார் சிலையை உடைக்கும் நிலைக்குப் போய் இருக்கிறது. அதற்குக் காரணம் கூடாநட்பு இந்த நிலை வேதனைக்குரியது இதனை விடுதலைச் சிறுத்தைகள் கண்டிக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "பாரதிய ஜனதா கட்சி இஸ்லாமியர்களை வைத்து அரசியலில் காய் நகர்த்திவருகிறது. இது இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எடுபடும். ஆனால் தமிழ்நாட்டில் ஒருபோதும் எடுபடாது என்பதால் அவர்கள் தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துகளைக் கூறுவது, பெரியார் சிலைகளை உடைப்பது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவருவது வருத்தமளிக்கிறது.
தமிழ்நாட்டில் குற்றங்கள் தடுக்கப்பட வேண்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் இதைக் குறிப்பிட்ட மதங்களுக்கு எதிராகத் திருப்புவது மதங்களுக்கிடையே வன்முறைகளைத் தூண்டுவது போன்ற வகையில் அரசியல் களத்தில் காய்களை நகர்த்துவது மக்கள் நலன்களைப் பாதிக்கும். இது முழுக்க முழுக்க அரசியல்தான்" எனக் கூறினார்.
இதையும் படிங்க : ‘சரியான நேரம் இதுவே என்பதால் பாஜக அரசு இதனைச் செய்கிறது’ - இந்து ராம் பேச்சு