சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் முழு அளவிலான 2022-23ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று (மார்ச் 18) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 13,176.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
மேலும், பயிர்க்கடன் தள்ளுபடிக்காக 2,531 கோடி ரூபாயும், நகைக்கடன் தள்ளுபடிக்காக 1,000 கோடி ரூபாயும், சுய உதவிக்குழுக்களின் கடன்கள் தள்ளுபடிக்காக 600 கோடி ரூபாய் என இம்மதிப்பீட்டில் மொத்தம் 4,131 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதியாண்டில், இதுவரை 14,15,916 விவசாயிகளுக்கு 9,773 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பயிர்க்கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 10,76,096 குறு, சிறு விவசாயிகளுக்கு 7,428 கோடி ரூபாய் மதிப்பில் வழங்கப்பட்ட பயிர்க்கடன்களும் அடங்கும்.
வட்டியில்லா பயிர்க்கடன் திட்டத்திற்கு, இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொது விநியோகத் திட்டத்தைச் செயல்படுத்த வரவு-செலவுத் திட்டத்தில் உணவு மானியமாக 7,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீட்டில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 13,176.34 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு 7,338.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், கால்வாய்கள், ஏரிகள், நீர்நிலைகளையும் நீர் வழித்தடங்களையும் மறுசீரமைத்தல், தடுப்பணைகள், கதவணைகள், தரைகீழ் தடுப்பணைகள் போன்ற நிலத்தடி நீர் செறிவூட்டும் கட்டமைப்புகளை ஏற்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக, இம்மதிப்பீடுகளில் 2,787 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.