Third wave: தமிழ்நாட்டில் மூன்றாவது அலையில் ஒமைக்ரான், டெல்டா ஆகிய இரண்டு வைரஸ்களின் தாக்கம் கண்டறியப்பட்டு வருவதாகவும், ஒமைக்ரான் பரவல் ஜனவரி இறுதி, பிப்ரவரி முதல் வாரத்தில் உச்சத்தைத் தொட்டு பின்னர் வேகமாகக் குறையும் எனவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆனாலும் ஒமைக்ரான் வைரஸ் தொற்றால் அதிதீவிர பாதிப்புகள் இல்லை என உறுதியாகக் கூற முடியாது எனவும், சரியான நேரத்தில் சிகிச்சைப் பெற வேண்டும் என்றும் தெரிவிக்கும் மருத்துவர்கள், தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்புகள் குறைவாகவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
நிமோனியா குறைவு
ஒமைக்ரான் வைரஸ் பெருந்தொற்றால் இந்தியா சவாலான சூழலைச் சந்தித்துவரும் நிலையில், நோயை எவ்வாறு எதிர்கொள்வது என வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையைச் சேர்ந்த முன்னணி நுண்கிருமி மருத்துவர் ஜான் ஜேக்கப் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டியில், "ஒமைக்ரான் வைரஸ் தொற்று வித்தியாசமாக இருக்கிறது. ஏற்கெனவே இருந்த கரோனா தொற்று பாதித்த சாதாரண மனிதருக்கு நுரையீரல் பாதிப்பு, நிமோனியா ஏற்பட்டு ஆக்சிஜன் தேவை ஏற்பட்டது.
ஆனால், தற்பொழுது வந்துள்ள ஒமைக்ரான் பாதிப்பில் நுரையீரல் பாதிப்புக் குறைவு, நிமோனியா குறைவு, ஆக்சிஜன் அளவு சரியாக இருக்கிறது.
இதனால் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு மட்டுமே தீவிரப்பாதிப்பு ஏற்படுகிறது. அதே நேரத்தில் நோய்த்தொற்று அதிகளவில் பாதிக்கப்பட்டு, அனைவருக்கும் பரவுகிறது. ஏற்கெனவே மருத்துவர்களுக்கு வந்துள்ளது.
தடுப்பூசி
ஒமைக்ரான் வைரஸ் நீங்கள் எந்தளவிற்குப் பாதுகாப்பாக இருந்தாலும் உங்களைத் தாக்கும். மேலும் சாதாரண முகக் கவசம் அணிந்துகொண்டால் மட்டுமே பாதுகாத்துக் கொள்ள முடியாது. என்.95 முகக்கவசம் அணிந்தால் 75 விழுக்காடு தற்காத்துக் கொள்ள முடியும்.
ஒமைக்ரான் வைரஸ் தொற்றுப் பரவல் குறித்த தகவல் நவம்பர் 27ஆம் தேதி தெரியும், உடனடியாக நாம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் அரசு தீவிரமாக எடுத்துக்கூறவில்லை.
இறப்பு விழுக்காடு
பொது ஊரடங்கு என்பது தேவையில்லை. பொது ஊரடங்கு அறிவித்தாலும் இதேபோன்று தொற்றுப் பரவலின் வேகம் அதிகமாகவே இருக்கும்.
ஒமைக்ரான் பரவலின் வேகத்தால் கடந்த இரண்டு நாள்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் டிசம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டாலும், 12 நாள்களில் வேகமாகப் பரவியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாள்களில் இரண்டு லட்சம் என ஒமைக்ரான் பரவல் உயர்ந்துவிடும். ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு ஜனவரி இறுதி வாரத்திலோ அல்லது பிப்ரவரி முதல் வாரத்திலோ உச்சத்தைத் தொடும்.
அதிலிருந்து மார்ச் மாதத்தில் மீண்டும் இயல்புநிலைக்குத் திரும்பும். ஒன்றரை மாதத்தில் எல்லோருக்கும் வருவதால், நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவர்களுக்கு மருத்துவமனையில் சிகிக்சை தேவைப்படும்.
இதனைக்காலம் தாழ்த்தி பரவலை கட்டுப்படுத்தினால், மருத்துவமனையில் படுக்கைகள் தேவை உடனடியாக அதிகரிக்காது. மேலும் இறப்பு விழுக்காடு மிகவும் குறைவாகவே இருக்கிறது.
பூஸ்டர் தடுப்பூசி
தடுப்பூசியை அனைவருக்கும் போடமல் இருப்பது என்பது நாம் செய்த மிகப்பெரும் தவறாகும். மொத்த மக்கள் தொகையில் 46 விழுக்காடு பேர் மட்டுமே 2 தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். பலர் முறையான தடுப்பூசி செலுத்தவில்லை. மேலும் பூஸ்டர் தடுப்பூசியின் பயன் குறித்தும் தெளிவாக கூறப்படவில்லை.
ஒமைக்ரான் தொற்றுப் பரவல் பிப்ரவரியில் உச்சம் தொட்டு, மீண்டும் குறையும்" என்றார்.
சாதாரண காய்ச்சல்
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி கூறும்போது, "கரோனா 3ஆவது அலையில் ஒமைக்ரான், டெல்டா என 2 வகையிலும் பரவி வருகிறது.
ஒமைக்ரான் பாதிப்பிற்கான அறிகுறிகளாக தொண்டை கரகரப்பு, மூன்றாம் நாளில் இருந்து இருமல், அதிகமான உடல் வலி ஆகியவை இருக்கிறது.
5 நாளில் இருந்து குணமடைந்து விடுகின்றனர். ஒமைக்ரான் பாதிப்பு அதிகம் இல்லாமல் இருக்கிறது என்பது தான் உலகளவில் தெரிகிறது. எனவே, நாம் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது.
சாதாரண காய்ச்சல் என்பதால் மருத்துவர்களைப் பார்க்காமல் வீட்டில் இருக்கக்கூடாது. ஒமைக்ரான் வைரஸ் பரவல் வேகம் அதிகமாக இருக்கிறது. இதனால் இணை நோய் உள்ளவர்கள், வயதானவர்கள் போன்றவர்களை அதிகளவில் தாக்கி, பிற நோய்களும் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே 3ஆவது அலையில் வரும் ஒமைக்ரான் வைரஸ் எந்தப் பாதிப்பும் இருக்காது எனக் கூற முடியாது.
சமூகப் பொறுப்பு
அனைவரும் கவனமாக இருப்பதுடன், தடுப்பூசி போடாதவர்கள் போட்டுக் கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு மட்டுமே பாதிப்பு அதிகம் தெரிகிறது.
கரோனா பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், கைகழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்றவற்றை அனைவரும் சமூகப் பொறுப்புணர்வு அறிந்து கடைப்பிடிக்க வேண்டும்.