சென்னை: பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மூன்றாம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் (Master Plan-3) பயிலரங்கம் தேனாம்பேட்டையில் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியாத்துறை அமைச்சர் தா. மோ அன்பரசன் உள்ளிட்டவர்களும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
உலக வங்கியின் நிதியில் மூன்றாவது முழுமை திட்டம் செயல்படுவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முழுமை திட்டம் 2026ஆம் ஆண்டில் முடிவடைய உள்ள நிலையில் 2027 முதல் 2046ஆம் ஆண்டுக்கான சென்னை மாநகர வளர்ச்சியின் முழுமை திட்டம் மற்றும் அதற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளன. அதற்கான பயிலரங்கத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ. அன்பரசன், "திமுக ஆட்சியில் தான் 2ஆவது முழுமை திட்டம் துவங்கப்பட்டது. தற்போது மூன்றாம் கட்ட திட்டப்பணிகள் குறித்து விவாதிக்க இந்த பயிலரங்கம் உபயோகப்படும். மக்கள் தொகைக்கு ஏற்ப அடைப்படை வசதிகளை மேம்படுத்துவது அவசியம். அந்த வகையில் அரசு அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. சென்னை சுற்றுப்புறத்தில் உள்ள நீர் நிலைகளை தனி கவனம் செலுத்த வேண்டும்.
வனத்துறை பகுதிகளில் பல ஆண்டுகளாக போடப்படாத சாலைகளை அமைக்கப்பட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகள் மற்றும் அனைத்து ஊராட்சிகளில் உள்ள ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு இடங்களை கண்டறிந்து அந்த பகுதிகளை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்காக நடவடிக்கைகள் அரசு அதிகாரிகள் செய்திட வேண்டும்" என கூறினார்.