சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் (49). இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தச்சு வேலை செய்துவருகிறார்.
நேற்று (ஜுலை 9) இரவு பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் அயனாவரம் பில்கிங்டன் சாலை வழியாக சண்முகம் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத இருவர் இருசக்கர வாகனத்தில் வந்து சண்முகத்திடம் கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த செல்போனை பறித்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இதையடுத்து சண்முகம் உடனடியாக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளரிடம் நடந்ததை குறித்து விவரித்துள்ளார். பின்னர் உதவி ஆய்வாளர் தன்னிடம் இருந்த செல்போனில் பறிபோன தொலைபேசியின் எண்ணை அழைத்து கொள்ளையரிடம் செல்போனை தருமாறு கூறியுள்ளார்.
அவர்கள் பெரம்பூர் பஸ் டிப்போ அருகே வந்து பெற்றுக்கொள்ளுமாறு செல்போனை பறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர்கள் சொன்ன இடத்திற்கு சண்முகம் காவல்துறையினருடன் சண்முகம் சென்றுள்ளார். அப்போது காவல்துறையினர் வருவதை அறிந்த கொள்ளையர்கள் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் கழிவறையில் பணிப்புரியும் முருகன் என்பவரிடம் செல்போனை கொடுத்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இதன்பின்னர் காவல்துறையினர் முருகனிடம் செல்போனை பெற்று சண்முகத்திடம் ஒப்படைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து காவல்துறையினர் கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க... 'திருட எதுவுமில்லை' - மீன் குழம்பை சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் மட்டையான திருடன்!