சென்னை: அண்ணா நகரைச் சேர்ந்தவர் விஜய். ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்றிரவு அரும்பாக்கம் ஸ்கைவாக் அருகே சவாரிக்காகக் காத்திருந்தார். அப்போது கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் செல்ல வேண்டும் என ஒரு நபர் சவாரி ஏறியுள்ளார்.
பின்னர் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்றதும், ஆட்டோ ஓட்டுநர் விஜய் செலுத்த வேண்டிய கட்டணத்தை அந்த நபரிடம் தெரிவித்துள்ளார். அப்போது பையிலிருந்து நீண்ட நேரமாக அந்த நபர் தேடி வெறும் சில்லறையாக எடுத்து ஆட்டோ ஓட்டுநரிடம் கொடுத்ததால், சந்தேகமடைந்த ஆட்டோ ஓட்டுநர் அந்த நபரின் பையைப் பார்த்த போது சிகரெட், பாக்கு, பணம் உள்ளிட்ட பொருட்கள் இருந்ததால் அவரை பிடித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
பின்னர் அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகுமார்(25) என்பதும், இவர் அமைந்தகரை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மளிகைக் கடையின் பூட்டை உடைத்து சிகரெட், பணம், பாக்கு உள்ளிட்டவற்றைத் திருடிக் கொண்டு சொந்த ஊருக்குத் தப்பிச் செல்ல முயன்ற போது போலீசாரிடம் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து நடந்த சம்பவம் அமைந்தகரை என்பதால் ராஜகுமாரை அமைந்தகரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். ராஜகுமார் எந்தெந்த கடைகளில் கொள்ளையடித்து விட்டுத் தப்பிச் செல்ல முயன்றார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பிளாட்பார்மில் பட்டா கத்தியை உரசியபடி சென்ற மாணவர்கள் கைது