சென்னை பல்லாவரம் பகுதியில் உள்ள வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்துவரும் தம்பதி ஆனந்தன்-மோனிஷா. ஆனந்தன் பல்லாவரம் பகுதியிலுள்ள ஒரு பிரியாணி கடையில் வேலை பார்த்துவருகின்றார்.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கடைகளில் பார்சல் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்ததையடுத்து, ஆனந்தனுக்கு வேலையில்லாமல் போனது.
இதனால் மனமுடைந்த அவர், பல்லாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பத்தோடு சென்றுள்ளார். கடந்த ஏழு நாள்களுக்கு முன்பு ஆனந்தனின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் ஆனந்தனின் வீட்டுக் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து உடனே அவருக்குத் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து ஆனந்தன், குடும்பத்தோடுவந்து பார்க்கும்போது வீட்டிலிருந்த நான்கு சீலிங் ஃபேன், மிக்சி, கிரைண்டர், சிலிண்டர், பாத்திர பண்டங்கள் உள்பட குழந்தைகள் விளையாடும் சொப்பு சாமான்களைக்கூட விட்டுவைக்க மனமில்லாமல், திருடன் தனது கைவரிசையைக் காட்டியுள்ளான் என்பது தெரியவந்தது.